மின்கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரம் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கவுள்ளது.
வருடாந்த மின்கட்டண திருத்தத்துக்கு அமைய எதிர்வரும் ஜுன் மாதம் மின்கட்டண திருத்தம் தொடர்பில் ஆராயப்படும்.இம்முறை மின்கட்டணம் குறைந்த சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மின்னுற்பத்திக்கு செலவாகும் தொகை மற்றும் மின்கட்டணம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மின்கட்டணம் தீர்மானிக்கப்பட வேண்டும். ஆகவே மின்கட்டணம் தொடர்பில் நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மின்கட்டண திருத்த நிர்ணய முறைமையை அமுல்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாம் தவணை விடுவிப்புக்கு மின்கட்டண திருத்த நிர்ணய முறைமை சிறந்த முறையில் தயாரிக்கப்பட வேண்டும் சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது.
மின்சார சபையால் முன்வைக்கப்படும் மின்கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஆராய்ந்ததன் பின்னர், மின் கட்டணம் திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் தமது யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு காலவகாசம் வழங்கப்படும்.