பயங்கரவாத தடை சட்டத்தை மூன்று மாதங்களுக்குள் நீக்குவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்கவும் அதற்கு பதிலாக புதிய சட் டம் ஒன்றை நிறைவேற்றவும் அரசாங்கம்
தீர்மானித்துள்ளது.
அத்துடன், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக நீக்காது திருத்தங்களை கொண்டுவரவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடை சட்டம் போர்க் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தச் சட்டத்தின் மூலம் வகை தொகையின்றி தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாகினர். இந்த
நிலையில், போர் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த நிலையிலும் பயங்கரவாத தடை சட்டம் நடைமுறையிலுள்ளது.
நடைமுறையிலுள்ள பயங்கரவாத சட்டத்துக்கு எதிராக பலரும் குரல் கொடுத்த போதிலும் இது நீக்கப்படவில்லை. இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் ஜி. எஸ். பி. பிளஸ் வரிச் சலுகையை இலங்கைக்கு அளிப்பதற்கு பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வலியுறுத்தியிருந்தது.
அண்மையில் நாட்டுக்கு வருகை தந்த ஐரோப்பிய ஒன்றிய ஜி. எஸ். பி. பிளஸ் கண்காணிப்பு குழுவும் இந்த சட்டத்தின் நீக்கம் தொடர்பில் பேசியிருந்தது. இந்தநிலையிலேயே பயங்கரவாத தடைசட்டத்தை நீக்குவதற்கு தற்போது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனிடையே, நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிராக தற்போது ஆட்சியிலுள்ள கட்சி பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தது.
அத்துடன், தாம் ஆட்சி அமைத்ததும் இந்த சட்டத்தை நீக்குவோம் என்றும் வாக்குறுதி அளித்தது. எனினும், இந்த சட்டத்தை தற்போதைய அரசாங்கமும் பயன்படுத்தியதுடன், இதனை நீக்கவும் தயக்கம் காட்டி வருகிறது.
இது, உள்நாட்டிலும் சர்வதேசதிலும் அரசாங்கத்துக்கு எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.