நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய கடந்த 2019ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு வருகைதந்தபோது அவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என அவுஸ்திரேலிய செனெட்டர் டேவிட் ஷுபிரிட்ஜ் அந்நாட்டு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இனப்படுகொலை தொடர்பில் வழக்குத்தொடர்வதற்கு சட்டமா அதிபரின் அனுமதி அவசியம் என்ற தேவைப்பாட்டை நீக்கும் சட்டமூலம் தொடர்பில் கடந்த வாரம் இடம்பெற்ற பொது அபிப்பிராயம் கோரலில் கருத்து வெளியிடுகையிலேயே அவுஸ்திரேலியாவின் கிரீன்ஸ் நியூ சௌத் வேல்ஸ் செனெட்டர் டேவிட் ஷுபிரிட்ஜ் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட காலப்பகுதியில் அழிவு இடம்பெற்ற அநேக பகுதிகளில் பணியில் இருந்தவரும், மிக மோசமான போர்க்குற்றவாளியாக பலரால் கருதப்படுபவருமான இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய கடந்த 2019ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு வருகைதந்தபோது, அவருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் விசாரணை மேற்கொள்வதற்குத் தவறியது ஏன்? என அவர் இதன்போது வினவியுள்ளார்.
அக்காலப்பகுதியில் ஜகத் ஜயசூரிய மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விபரங்களை சில அமைப்புக்கள் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸாருக்கு வழங்கியிருந்ததாகவும், இருப்பினும் அப்போது நிலவிய சில நிர்வாக சிக்கல்களின் காரணமாக இதுகுறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பெடரல் பொலிஸில் எவருக்கும் அறிவுறுத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டிய ஷுபிரிட்ஜ், ‘இப்பின்னணி குறித்து நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா?’ என சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையாகியிருந்த அதிகாரி கிறிஸ்டோபர் மலோனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்குப் பதிலளித்துள்ள கிறிஸ்டோபர் மலோன், இவ்வாறான தனிநபர்கள் சார்ந்த மிகக் குறிப்பான விடயங்கள் தொடர்பில் தனக்குப் பரிச்சயம் இல்லை எனவும், இருப்பினும் இதுகுறித்து அவதானம் செலுத்தத்தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.