எனக்கும், அ. தி. மு. கவுக்கும் பிரச்சினை இல்லை – அண்ணாமலை!

editor 2

எனக்கும், அ. தி. மு. கவுக்கும் பிரச்சினை இல்லை என பா.ஜ. க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அதேபோன்று அ. தி. மு.கவுக்கும் பா. ஜ. க. தலைவர்களுக்கும் இடையே பிரசினை ஏதும் இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இரு கட்சிகளிடையே சமரசம் ஏற்பட்டு வருகிறது.

முன்னாள் முதல்வர் அண்ணா தொடர்பாக சமீபத்தில் பா. ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரது கருத்துக்கு அ. தி. மு. க. முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் கண்டனம் தெரிவித்து பேசியிருந்தார்.

இதற்கு எதிர்வினையாக அண்ணாமலை அளித்த பேட்டி இரு கட்சிகளிடையே கடும் வார்த்தைப் போரை ஏற்படுத்தியது.

அதிமுக கூட்டணியில் பா. ஜ.க. இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் இரு கட்சி தலைவர்களிடையே சமரசம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் நேற்று அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணாமலைக்கும், அதிமுகவுக்கும் பிரச்சினை இல்லை. பா. ஜ.கவுக்கும், அ. தி. மு. கவுக்கும் பிரச்னை இல்லை. அ. தி. மு.கவில்உள்ள சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்னை இருக்கலாம்.

இயற்கையாக முட்டல், மோதல்கள் வருவது சகஜம். அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள வேண்டிய தில்லை.

மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்பதே எங்களை இணைக்கும் புள்ளி. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சொல்வதுபோல், மத்தியில் மோடி, மாநிலத்தில் பழனிசாமி என்பதை நான் எப்படி சொல்ல முடியும். அதை தேசிய தலைவர்தான் சொல்ல முடியும்.
அது என் வேலை கிடையாது. தமிழகத்தில் பா. ஜ. க. ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் இங்கு தலைவராக இருக்கிறேன்.

அ. தி. மு. கவில் 4 பேர் பேசியுள்ளனர். அவர்களின் தனிப்பட்ட ஒவ்வொரு பேச்சுக்கும், நான் பதில் கருத்து சொல்வது நன்றாக இருக்காது. பா. ஜ. க. தேர்தலில் போட்டியிடும்போது
பெறும் வாக்கு சதவீதம்தான் அதற்கு பதில். மது ஒழிப்புக்கு இலக்கணம் அண்ணா. குடும்ப அரசியலை எதிர்த்தவர் அண்ணா. அண்ணாவை தரக்குறைவாக நான் விமர்சிக்கவில்லை. அண்ணா பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. சரித்திரத்தில் உள்ளதைத்தான் பேசுகிறேன் என்றார்.

Share This Article