இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைகிறது சீனக் கப்பல்!

editor 2

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீனாவின் ஷின் யான் 6 என்ற கப்பல் நாளை 23ஆம் திகதி இலங்கை வரவுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தக் கப்பல் மூலம் 750 கி.மீ. தூரம்வரையிலான இடங்களைக் கண்காணிக்கமுடியும். இதன்படி இந்தியாவின் சிறீ ஹரிகோட்டா விண்கல ஏவுதளம், கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்களை இந்தக் கப்பல் மூலம் உளவு பார்க்க வாய்ப்புள்ளது.

இதனால், சீன கப்பல்களின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்புத்தெரிவித்து வருகிறது.
எனினும், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அடுத்தடுத்து சீன உளவு கப்பல்களுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கிவருகிறது.
ஏற்கனவே இலங்கைக்கு 2நாட்கள் பயணம் மேற்கொள்ள இருந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கடைசி நேரத்தில் அதனை இரத்து செய்திருந்தார்.

சீன உளவு கப்பலுக்கான அனுமதியை இலங்கை வழங்கினால் பதற்றமான நிலைமைகள் உருவாகும் என இலங்கையில் உள்ள நடுநிலையாளர்கள், இந்திய ஆய்வாளர்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையின் ருகுணு பல்கலைக்கழகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, இந்த கப்பல் இலங்கைக்கு வருகிறது என்று நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்திநிறுவனம் தெரிவித்துள்ளது.

நீர் மாதிரிகளை எடுப்பதற்காக தமது நிறுவனம் இந்த கப்பலுடன் பணியில் ஈடுபடும் என்றும் நாரா நிறுவனம் தெரிவித்திருந்தது.

எனினும் இதுவரை இந்தகப்பல் வருவதற்கான அனுமதி கிடைக்க வில்லை என்று ருகுணு பல்கலைக்கழகத்தின் கடல்சார் தொழில்நுட்ப துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த உளவு கப்பல் கடந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் திகதி இலங்கைக்கு வந்ததோடு, 10 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் நிறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Share This Article