காலி சிறைச்சாலையில் பரவி வந்த மெனிங்கோகோகஸ் பற்றீரியா நோய் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், வழக்கு விசாரணைகளுக்காக கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வது மற்றும் சிறைச்சாலைக்குள் புதிய கைதிகளை அனுமதிப்பதை தற்காலிகமாக இடைநிறுத்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
காலி சிறைச்சாலையில் அண்மையில் பரவிய பற்றீரியா தொற்று காரணமாக கைதிகள் இருவர் உயிரிழந்ததுடன் தொற்றுக்குள்ளான 16 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
கைதிகளின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு விசேட வைத்தியர்கள் குழுவொன்று அனுப்பப்பட்டு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த குழுவின் அறிக்கைகளுக்கு அமைவாக கைதிகளிடையே மெனிங்கோகோகஸ் பற்றீரியாவால் ஏற்பட்ட நோய் தொற்று நிலைமை என உறுதி செய்யப்பட்டது.
காய்ச்சல், தலைவலி, கழுத்து வலி, குமட்டல், வாந்தி, சூரிய ஒளி உடலில் படுவதால் சிக்கல், உடலில் கடினத்தன்மை என்பன நோய்த் தொற்று அறிகுறிகளாகும்.
இந்நிலையில், தொற்றுக்குள்ளான 9 பேர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் இதில் இருவர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.மேலும் 7 பேர் சிறைச்சாலையின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சிறைச்சாலை பரவிய பக்டீரியா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பற்றீரியா மனித மூளையின் செயல்திறனை கடுமையாக பாதிக்கிறது. இதன் காரணமாக விரைவாக மரணம் சம்பவிக்கலாம். இது இலங்கையில் அரிதான நோயாகும். குறிப்பாக வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு வருகை தந்த ஒருவரிடமிருந்து இந்த பற்றீரியா பரவியிருக்கலாம். எவ்வாறு சிறைச்சாலையில் தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் கண்டறியப்படவில்லை.
காலி சிறைச்சாலையில் சுமார் ஆயிரம் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள். நோயெதிர்ப்பு குறைபாடு உள்ள தரப்பினர் மீது இந்த நோய் இலகுவில் பரவ வாய்ப்புகள் உள்ளன. குறித்த பற்றீரியா இதற்கு முன்னரும் புதிய மகசீன் சிறைச்சாலை, மஹர சிறைச்சாலைகளில் பரவியது. நாம் அதனை கட்டுப்படுத்தினோம்.
எனவே, பற்றீரியா தொடர்பில் வீணான அச்சம் கொள்ள தேவையில்லை. பற்றீரியா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முடியுமான அளவு சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிவது, கையுறை அணிவது, தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்துவது என்பன பின்பற்ற வேண்டும். கைதிகளை பார்வையிட வருகை தருவோர் போது சுகாதார ஆலோசனைகள் பின்பற்ற வேண்டும் என்றார்.