வழமையான கலகலப்பை விட அன்றைய தினம் அந்த வீட்டில் அதிகப்படியான சந்தோசம் நிறைந்தே காணப்பட்டுள்ளது. அந்த வீட்டின் அனைவரின் பரிசத்திற்கும் பாத்திரமான மகளின் பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருந்தனர் வீட்டார். எனினும் அந்த நிகழ்வு நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
நேரம் நள்ளிரவு 12.05 அண்மித்துக்கொண்டிருந்தபோது அந்த வீடு நிலைமாறி உருத்தெரியாது போகும் என்று எவரும் நினைத்திருக்கமாட்டார்கள். அழகிய நிகழ்வு அலறல் சத்தத்துடன் நிறைவுக்கு வந்தது.
இது வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற வீட்டுக்கு தீயிட்டு வாளால் வெட்டியும் கூலிப்படையால் நடத்தப்பட்ட படு பயங்கரமான செயல் இடம்பெற்ற வீட்டின் நிலையே.
இஸ்லாமியரான வவுனியா வர்த்தகர் சுரேஸ் என்கின்ற முகமட் இர்ஷாட் தோணிக்கல்லில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். ஜுலை மாதம் 23 ஆம் திகதி அவருடைய மகளான 19 வயதான பார்த்திமா சஜானாவுக்கு பிறந்தநாள் கொண்டாட தீர்மானித்த அவர் இரவு 12 மணிக்கு மகளுக்கு பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட இருந்த நிலையில் தனது நண்பர்கள் உறவினர்கள் என சிலரையும் வீட்டிற்கு அழைத்திருந்தார்.
இந்த வகையிலேயே தனது சித்தியின் மகளான 21 வயதான பார்த்திமா சசீமா சைனி அவருடைய தாய் (சித்தி), தந்தை மற்றும் கணவரான சுகந்தன் ஆகியோரும் கொழும்பில் இருந்து வவுனியா வந்து அவருடைய வீட்டில் தங்கியிருந்ததுடன் அன்றைய தினம் சஜானாவின் பிறந்தநாளையும் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இரவு 12.05 மணியளவில் வீட்டின் முன் வாயில் கதவு (கேற்) தட்டப்பட்டிருக்கின்றது. வீட்டின் உரிமையாளரான சுரேஸ் என்கின்ற இர்ஷாட் தனது மகளுக்கு சப்பிரைஸ் கிப்ட் வந்துள்ளதாக நினைத்து முன் கதவை திறந்து பிரதான வாயிலுக்கு சென்றிருக்கின்றார். இதன் போது அவரின் மனைவி மற்றும் இறந்த பெண்ணின் தாயாரும் சென்றிருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாயில் கதவை திறந்ததும் அங்கு முகமூடி அணிந்திருந்த 10 இற்கும் மேற்பட்டவர்கள் சுகந்தன் எங்கே என கோரியுள்ளனர். இதனால் அச்சமடைந்த இர்ஷாட் எதற்காக சுகந்தனை தேடுகின்றீர்கள் நீங்கள் யார் என கேட்ட மறுகணமே அவருக்கு வாளால் வெட்டியிருக்கின்றனர். இதனையடுத்து இர்ஷாட் ஓடிச்சென்று தனது வீட்டில் ஒளிந்து கொண்டதும் அவரின் பின்னால் சென்ற இருவரும் பயத்தில் கத்தியுள்ளனர்.
இந்நிலையில் வீட்டின் முன் கதவு திறந்து காணப்பட்டதனால் வீட்டினுள் சென்ற கூலிப்படை வீட்டில் இருந்தவர்களை வெளியேறுமாறு கூறி சுகந்தனை தேடியுள்ளனர். இதன்போது வீட்டில் பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருந்தவர்கள் என்ன நடக்கின்றது என்பதனை அறிவதற்கு அவகாசம் கிடைக்காத நிலையில் பயத்தினால் வீட்டின் அறையினுள் சென்று ஒளிந்துகொண்டுள்ளனர்.
இதன்போது பெற்றோல் மற்றும் ஒயில் கலந்த கலன்கலுடன் வந்த கூலிப்படை வீட்டை தீயிட்டுள்ளனர். இந்நிலையில் அறையினுள் இருந்த சுகந்தன் தனது மனைவியையும் அழைத்துக்கொண்டு வெளியேறியபோது வீட்டின் முன்புறம் அதிகளவில் தீப்பற்றியிருந்துள்ளது. சுகந்தனின் மனைவியான சசீமா சைனி தவறுதலாக விழுந்துவிடவே அவரை தூக்குவதற்கு சுகந்தன் முயற்சித்துள்ளார். எனினும் அது சாத்தியப்படாத நிலையில் சுகந்தனிலும் தீப்பற்றியுள்ளது.
அதனால் தனது மனைவியை தூக்கும் முயற்சியை கைவிட்டு வெளியில் சென்று மண்ணில் புரண்டு தீயை அணைக்க முற்பட்டுள்ளார்.
இதற்கிடையில் அலறல் சத்தம் கேட்ட அயலவர்கள் ஓடிவந்தபோது வீடு முழுமையாக தீப்பற்றியிருந்த நிலையில் அறைகளுக்குள் இருந்தவர்களை மீட்பதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்டு மீட்டெடுத்த நிலையில் பொலிஸாரின் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவலை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவுக்கும் தகவலை வழங்கியிருந்த நிலையில் பற்றியெரியும் வீட்டிற்குள் உள்ளவர்களை மீட்கும் செயற்பாட்டில் அயலவர்கள் ஈடுபட்டபோதிலும் அங்கிருந்த 3 வயது முதல் 46 வயதான 9 பேர் தீக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வீட்டுக்கு தீ வைத்த கும்பல் தப்பியோடியிருந்த நிலையில் சம்பவ இடத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது. வீட்டினுள் விழுந்து கிடந்த சசீமா சைனியை எவரும் காணாததால் அவர் வீட்டினுள்ளேயே தீக்காயம் மற்றும் மூச்சு திணறலால் மரணமடைந்திருந்த நிலையில் தீயணைப்பு படையினர் வருகை தந்ததன் பின்னர் அவரை மீட்டிருந்தனர்.
அன்றைய தினம் வவுனியா மட்டுமல்ல இலங்கை வாழ் மக்கள் இச்சம்பவம் தொடர்பாக அறிந்தகொள்ளும் ஆர்வத்தில் காணப்பட்டபோதிலும் ஒரு பரப்பரப்பு காணப்பட்டிருந்தது.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட பல அதிகாரிகளும் வருகை தந்து சென்ற நிலையில் வவுனியா மாவட்ட பதில் நீதிவான் த. ஆர்த்தி சம்பவம் இடம்பெற்ற வீட்டை பார்வையிட்டிருந்தார்.
இந்நிலையில் 35 வயதான சுகந்தன், 19 வயதான பாத்திமா சஜானா, 33 வயதான தேவராணி, 46 வயதான தாரணி, 46 வயதான சுதர்சினி, 7 வயதான ஆக்ஸட்டினா, தர்வின் சுதர்சினி, தனுசா, 40 வயதான முகமட் இர்ஸாட் ஆகியோர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் கடும் காயங்களுக்குள்ளான சுகந்தன் வவுனியா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களின் உறவினர்களால் சில தினங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் மறுநாள் அவர் மரணமடைந்தார்.
இந்நிலையில் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொள்ள தொடங்கிய நிலையில் சிசிரிவி காணொளிகளை முதலில் ஆராயத்தொடங்கியபோது குறித்த வீட்டின் வெளியில் இருந்த சிசிரிவி கமரா உடைக்கப்பட்டிருந்ததுடன் வீட்டின் உட்பகுதியிலும் கமராக்கள் செயற்பட்டிருக்கவில்லை என தெரிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அயலில் உள்ள சிசிரிவி கமராக்களை பரிசோதித்தபோது முகமூடி மற்றும் கையுறை அணிந்த சிலர் கையில் எரிபொருள் கலன்கள் மற்றும் வாள்களுடன் வரிசையாக நடந்து வருவதனையும் பின்னர் அவர்கள் தப்பி செல்வதனையும் அடையாளம் கண்டுகொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக பிரதிபொலிஸ் மா அதிபர் பி. அம்பாவிலவின் கண்காணிப்புடன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் களுஆராச்சியின் ஆலோசனையில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடியின் வழிநடத்தலில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் கஜேந்திரன் பிராந்திய குற்றப்புலனாய்வு பிரிவு பிரதான பொலிஸ் பரிசோதகர் அழகியவண்ண தலைமையிலான பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் தடயவியல் பொலிஸார், குற்றவியல் கைவிரல் அடையாள நிபுணர்கள், மோப்பநாய்களின் உதவியுடனும் தீவிரமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 26 ஆம் திகதி இரசாயன பகுப்பாய்வாளர்கள் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு வருகை தந்து பகுப்பாய்வில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது தோணிக்கல் பகுதியில் உள்ள மயானத்தில் இருந்து கையுறை, கல்வனைஸ் பைப் என்பன மோப்ப நாயின் உதவியுடன் மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரதி பொலிஸ்மா அதிபர் பி. அம்பாவில வவுனியா பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக தலைமையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட நிலையில் பிராந்திய குற்றப்புலனாய்வு பிரிவு, சிவில் புலனாய்வு பிரிவு என்பன பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தன.
இந்நிலையில் குற்றச்செயலுக்கான திட்டம் தவசிகுளம் குளப்பகுதியில் இருந்து திட்டமிடப்பட்டதாக பொலிஸாருக்கு தெரியவருகின்ற நிலையில் குறித்த கிராமத்தில் விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியிருந்தனர்.
இதன்போது குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தொலைபேசி அழைப்பொன்று கிடைக்கப்பொற்றிருக்கின்றது.
இத்தொலைபேசி அழைப்பு அப்பகுதியில் பல குற்றங்களை மேற்கொண்ட ஒருவருடைய அழைப்பாக இருந்துள்ளது. அவரின் தகவலின் பிரகாரம் குறித்த சம்பவம் தொடர்பாக தனக்கு சில தகவல்கள் தெரியும் என தெரிவித்திருந்தார்.
குற்றத்தடுப்பு பொலிஸார் அவரிடம் நேரடியாக தகவல்களை பெற்றபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. குறித்த நபர் இச்சம்பவத்துடன் தான் தொடர்புபடாத போதிலும் இது பாரதூரமான சம்பவமாக காணப்படுவதால் தான் அறிந்த தகவல்களை தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு பொலிஸாருக்கு தகவலை வழங்குவதாகவும் கூறியிருந்தார்.
இதன் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக குறித்த தொலைபேசி கோபுரத்தின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் மரணடைந்த சுகந்தன் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலும் குறித்த பகுதியில் உள்ளவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலும் சந்தேக நபர்கள் இவர்கள்தான் என்பது உறுதி செய்யப்படுகின்றது.
31 ஆம் திகதி தவசிகுளம் பகுதியில் வைத்து முதலாவது சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த சம்பவத்தினை மேற்கொள்வதற்காக ஒப்பந்தம் மேற்கொண்ட நபர் வவுனியாவில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இதன் தொடர்ச்சியாக 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்கள் தொலைபேசிகள் மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மிகுதி விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு ஒப்படைக்குமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்ட நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள தொடங்கியிருந்தனர்.
இதன் பிரகாரம் சந்தேக நபர்களை தடுப்பு காவலுக்கு எடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 5 வாள்கள், கையுறைகள் உட்பட சில எரிக்கப்பட்ட பொருட்களும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மேலும் விசாரணை மேற்கொள்வதற்காக நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியபோது ஒரு நாள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து உயிரிழந்த சுகந்தனின் நண்பராக இருந்த ஒருவர் பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்த நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இம் மாதம் 3 ஆம் திகதி கைது செய்யப்பட்டு வவுனியா நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஒரு நாள் தடுப்பு காவல் உத்தரவை பெற்றுக்கொண்டனர்.
இதன் பிரகாரம் விசாரணைகள் முடிவடைந்து வைத்திய பரிசோதனைகளின் பின்னர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவினை வவுனியா நீதிவான் வழங்கியிருந்த நிலையில் சந்தேக நபர்கள் அனுராதபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் 11 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் சாட்சியாக காணப்பட்டவர் சிகிச்சையில் இருப்பதனாலும் அவர் நீதிமன்றத்திற்கு வர முடியாமையாலும் அடையாள அணிவகுப்பு பிற்போடப்பட்டதுடன் சந்தேக நபர்கள் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவினை வவுனியா நீதிவான் வழங்கியிருந்தார்.
குறித்த சம்பவம் பெண் விவகாரத்தினால் நடந்ததாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் போதைப்பொருள் வியாபாரமும் இதனுள் சம்பந்தப்பட்டிருக்குமா என்பது தொடர்பில் பலத்த சந்தேகம் மக்கள் மத்தியில் நிறைந்தே காணப்படுகின்றது.
ஏனெனில் மரணமடைந்த சுகந்தன் மற்றும் பிரதான சந்தேக நபராக கைது செய்யப்பட்டிருப்பவரும் அடிதடி மற்றும் பல்வேறு சமூகத்திற்கு விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தமையும் மறுப்பதற்கில்லை.
எது எவ்வாறாயினும் சட்டம் தன் கடமையை செய்யும் நிலையில் தனி நபர்கள் மற்றவர்களுக்கு தீர்ப்பு வழங்கும் ரவுடிஸ போக்கு ஒழுக்கமுள்ள சமூகத்திற்கு ஏற்புடையதல்ல.
எனவே இவ்வாறான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு அதிக பட்ச தண்டனையை நீதியினூடாக பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே இலங்கையர்களின் கோரிக்கையாகவுள்ளது.
தகவல் க.அகரன்
நன்றி – தமிழ்மிரர்