ஜனநாயகத்தை விரும்புவோர் ஜே.வி.பியினரை துரத்தி அடிக்க வேண்டும் – சட்டத்தரணி வி.மணிவண்ணன்!

ஜனநாயகத்தை விரும்புவோர் ஜே.வி.பியினரை துரத்தி அடிக்க வேண்டும் - சட்டத்தரணி வி.மணிவண்ணன்!

Editor 1

ஜே.பி.வி ஆட்சியாளர்கள் தேர்தல்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை கூட பாராளுமன்றில் சட்டங்களை இயற்றி செய்ய கூடியவர்கள். எனவே ஜனநாயகத்தை விரும்புவோர் ஜே.வி.பியினரை மண்ணில் காலூன்ற விடாது துரத்தி அடிக்க வேண்டும் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் போட்டியிடுகின்றது. அதில் யாழ், மாநகர சபை உள்ளிட்ட நான்கு உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பெண் வேட்பாளர் ஒருவரின் சத்திய பிரமாணத்தில், சத்தியப்பிரமான ஆணையாளரின் ஒப்பம் இல்லை, இளம் வேட்பாளர்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட பிறப்பத்தாட்சி பத்திரங்களின் ஒப்பம் இல்லை உள்ளிட்ட காரணங்களுக்காக எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தோம், எமது வழக்கு உச்ச நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை எமக்கு கூறப்பட்ட காரணங்கள் போன்று, வேறு கட்சிகள் சுயேட்சை குழுக்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அவர்கள் மேல் முறையீட்டு நீதிமன்றுக்கு சென்றிருந்தார்கள். அவர்களின் வேட்பு மனுக்களை ஏற்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.

எமக்கு கூறப்பட்ட காரணங்களால் நிராகரிக்கப்பட்ட மனுக்களை மேன் முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளமையால், அந்த கட்டளையை மேற்கோள்காட்டி எமது மனுக்களையும் ஏற்றுக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தோம்.

நீதிமன்ற கட்டளை உள்ள வேட்புமனுக்களையே ஏற்றுக்கொள்வோம். நீங்கள் 20ஆம் திகதிக்கு முன்னர் வழக்கு தொடருங்கள் என அறிவுறுத்தினார்கள். அதன் பிரகாரம் நாம் கடந்த 15ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தோம்.

குறித்த வழக்கு திங்கட்கிழமை (21) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கால தாமதம் என காரணம் கூறி தேர்தல் ஆணைக்குழு மன்றில் எமது மனுக்களை விசாரணைக்கு எடுக்க ஆட்சேபணை தெரிவித்தமையால் எமது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஒரு காரணத்திற்காக நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளை வழங்கினால், அதே காரணத்திற்காக நிராகரிக்கப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் கடப்பாடு.

நீதிமன்ற கட்டளைகள் இருந்தால் மாத்திரமே ஏற்றுக்கொள்வோம் என கூறி , எம்மை வழக்கு தொடருமாறு அறிவுறுத்திய பின்னர் நாம் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் கால தாமதம் என கூறியுள்ளார்கள்.

இதனூடாக ஜனநாயகத்தை கேவலப்படுத்தி, அதனை குழி தோண்டி புதைத்துவிட்டு தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடாத்தவுள்ளது.

இங்கே தேர்தல் ஆணைக்குழு, நீதியாக, நேர்மையாக,ஜனநாயக ரீதியாக சுயாதீனமாக செயற்படுகின்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது ஜே.பி.வியின் காட்டாச்சியை எடுத்துக்காட்டுகின்றது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே நாம் மக்களை எச்சரித்தோம். ஜே.வி.பியினர் இடதுசாரி கொள்கையை பின்பற்றுபவர்கள், அவர்கள் ஜனநாயகம் என்றால் என்ன விலை என கேட்க கூடியவர்கள். இன்று இடதுசாரி கொள்கையை பின்பற்றி ஆட்சி நடாத்தும் சீனா, கியூபா போன்ற நாடுகளில் என்ன நடக்கின்றது என எல்லோருக்கும் தெரியும்.

இந்த ஜே.பி.வி ஆட்சியாளர்கள் தேர்தல்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை கூட பாராளுமன்றில் சட்டங்களை இயற்றி செய்ய கூடியவர்கள்.

எனவே ஜனநாயகத்தை விரும்புவோர் ஜே.வி.பி யினரை மண்ணில் காலூன்ற விடாது துரத்தி அடிக்க வேண்டும் என்றார்.

Share This Article