தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பழிவாங்கும் நோக்குடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தனது பாதுகாப்புக்கென பொலிஸ் அதிகாரிகளையோ அல்லது எம்.எஸ்.டி. அதிகாரிகளையோ வைத்துக்கொள்ளாத அரசியல்வாதிதான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். சாரதியுடன்தான் அவர் எல்லா இடங்களும் செல்கின்றார். அவர் அமைதியான நபர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு ஐந்து, பத்து பேர் இருக்கின்றனர். வடக்கு பகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் அவர் பாதுகாப்பு அதிகாரிகளை வைத்து கொள்ளாதவர். சாரதி மட்டுமே உள்ளார். அவரைக் கைது செய்தது தவறு. நாடாளுமன்ற அமர்வு நாட்களில் அவரைக் கைது செய்ய முடியாது. பழிவாங்கும் நோக்குடன் அவரைப் பொலிஸார் கைது செய்தனர்.” – என்றார்.