இலங்கையின் ஊழலை ஒழிக்கும் செயல்பாட்டுத் திட்டத்தை மாவட்ட மட்டத்தில்
செயல்படுத்துவதற்கான ஆரம்ப கட்டமாக பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இலஞ்சம் மற்றும் ‘ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை முறையிடுவதற்கு உள்ளக அலுவல்கள் அலகு’ எனும் பிரிவு நேற்றுக் காலை 09.00 மணிக்கு உத்தியோகபூர்வமாக யாழ். பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் மாவட்ட செயலகத்தில் திறந்துவைக்கப்பட்டது.
இவ் அலகை திறந்துவைத்து உரையாற்றிய அரசாங்க அதிபர், ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாவட்ட மட்டத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஊழல் செயல்பாடுகளை தடுப்பதாகவும் அதே வேளை அலுவலகச் செயல்பாடுகள் வெளிப்படுத்தன்மை யுடையதாகவும் இருக்கவேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு
அமையவும், பொதுமக்கள் மாவட்ட செயற்பாடுகள் தொடர்பாக முழுமையான
விவரங்களை அறிந்து கொள்வதற்கும், குறிப்பாக அலுவலக நடைமுறைகள்
தொடர்பாகவும் அல்லது ஏதாவது விடயங்கள் தொடர்பிலும் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படுகின்றபோது இந்தப் பிரிவை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இதனை நம்பகத்தன்மையான அலுவலகமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் முறைப்பாடுகளை முன்வைக்க விரும்பின் இந்த அலுவலகத்தில் முறைப் பாடுகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிப்படுத்தன்மை மற்றும் ஊழலற்ற இலஞ்சமற்ற பிரதேசத்தை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நிர்வாகத்தின் நடைமுறைகளை பின்பற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் – என்றார்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.