கடந்த முதலாம் திகதி வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் 26 வயது இளைஞன் ஒருவர் மர்மமாக உயிரிழந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
நாவலையில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் நபர் ஒருவர் நுழைந்ததாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து, வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகளால் அதே நாளில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வீட்டில் விசாரிக்கப்பட்ட அந்த நபரின் நடத்தையைப் பார்த்தால், அவர் மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நாவல வீட்டில் வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர் காவலில் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவல் நிலையத்தில், அந்த நபர் கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டதாகவும், சிறைச்சாலையின் சுவரில் மோதி தற்கொலைக்கு முயன்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது நடத்தை காரணமாக, அவர் முல்லேரியாவில் உள்ள தேசிய மனநல நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மறுநாள் காலை அந்த நபர் இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும், சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் சட்டத்தரணியும் நிர்வாக பணிப்பாளருமான சேனக பெரேரா, அந்த நபர் பொலிஸ் நிலையத்தில் இருந்தபோது சித்திரவதை செய்யப்பட்டதாகவும், அதன் விளைவாக அவர் உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டினார்.
உயிரிழந்த இளைஞர் பதுளை, மீகஹகிவுல பகுதியைச் சேர்ந்தவர்.
புதன்கிழமை வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற அவரது தாயார், தனது மகனின் ஆடைகள் கழற்றப்பட்டதாகக் கூறினார்.
கைது செய்யப்பட்டபோது அவர் அணிந்திருந்த கால்சட்டை ஒரு குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறினார்.
இது குறித்து விசாரித்தபோது, அந்த இளைஞர் தற்கொலைக்கு முயன்றதாக பொலிஸழர் அவரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.
திருட்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பின்னர் காவலில் இறந்த வீட்டு பணிப் பெண் ராஜ்குமாரி இறந்தது தொடர்பான முந்தைய சம்பவத்தையும் பெரேரா சுட்டிக்காட்டினார்.