மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை மீண்டும் விசாரணைக்கு அழைத்து வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
மேலும், அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதில் அதிகாரிகள் சில சட்ட சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அவரை இலங்கைக்கு நாடு கடத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
அவர் மீதான வழக்கு, அர்ஜூன மகேந்திரன் முன்னிலையிலோ அல்லது அவர் இல்லாமலோ தொடரும்.
சிங்கப்பூரில் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாகக் கூறி நாட்டை விட்டு அர்ஜூன மகேந்திரன் வெளியேறினார் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னர் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.
மகேந்திரன் மீண்டும் நாடு திரும்புவதை உறுதி செய்வது முன்னாள் ஜனாதிபதியின் கடமை – என்றும் அவர் கூறினார்.