சட்டவிரோதமாகக் கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்களைக் கைது செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சியின்போது, இலங்கை கடற்படை சிப்பாய் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் மீனவர்கள் இருவர் காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறையை அண்மித்த கடற்பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோதமாகக் கடற்றொழில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காகக் கடற்படை சிப்பாய் ஒருவர் மீனவர்களின் படகில் ஏறியபோது, அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தில் கடற்படை சிப்பாயின் துப்பாக்கி சுயமாக இயங்கியதில் மீனவர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதன்போது, 13 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர்களில் காயமடைந்த இருவர் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.