13 தொடர்பில் இந்தியா பேசாமலிந்தால் பெரு மகிழ்ச்சி – கஜேந்திரகுமார்!

Editor 1

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் தொடர்பாக இந்தியா இனி மேல் பேசாமல்விட்டால் அதனால் பெருமளவுக்கு மகிழ்ச்சியடையக்கூடிய ஒருவராக தானே இருப்பார் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

தங்களது பிரச்னைக்கு தீர்வாக 13ஆவது திருத்தத்தை பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மூன்று வருடங்களில் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் வரை மாகாண சபைகள் முறை தொடர்ந்து இருக்கும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறிக் கொண்டிருந்தால் மாத்திரம் போதாது. மாகாணசபை தேர்தல்களை நடத்தி 13 வது திருத்தத்தை சாத்தியமானளவு அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் இது விடயத்தில் ஓரளவு நம்பகத்தன்மையைப் பெறமுடியும் என்று பத்திரிகையாளர் ஒருவர்
எக்ஸ் தளத்தில் செய்த பதிவுக்கு பதிலளித்தே கஜேந்திரகுமார் மேற்கண்ட கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

மாகாண சபை முறையையோ அல்லது 13 வது திருத்தத்தையோ இல்லாமல் செய்வதற்கு இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்று வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகள் இது வரையில் நம்பிக்கை வைத்திருக்கக் கூடும். ஆனால், அண்மையில் இந்தியாவுக்கு உத்தி யோகபூர்வ விஜய மொன்றை மேற்கொண்டு புதுடில்லி சென்ற ஜனாதிபதி அநுரா குமாரதிஸ நாயக்கவுடன் பேச்சு வார்த்தைகளை நடத்திய பிறகு அவருடன் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 13 வது திருத்தத்தை பற்றி எதையுமே கூறுவதை தவிர்த்தார்.

இதன் மூலமாக கூறப்பட்ட செய்தியை தமிழ்க்கட்சிகள் விளங்கிக் கொண்டிருக்கின்றனவோ தெரியவில்லை என்றும் அந்த பத்திரிகை யாளர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

கஜேந்திரகுமார் தனது பதிவில் மேலும் கூறியிருப்பதாவது – தமிழ் மக்களின் சார்பிலேயே இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கையில் இந்தியா கைச்சாத்திட்டது என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டியதாகும்.

சமாதான உடன்படிக்கையில் தமிழர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் வரை தமிழ் மக்கள் சார்பில் தலையீடு செய்வதற்கான கடமைப்பாடு இந்தியாவுக்கு உண்டு என்று நான் நினைக்கிறேன்.

ஆனால், இன்றைய சூழ்நிலையில் சமாதான உடனபடிக்கை பொருத்தமற்றது என்று இந்தியாவே உணருமானால், அது முற்றுமுழுதாக வேறு விடயம். நாங்கள் விரைவாக சிறந்த ஒரு தெரிவை கண்டறிய முடியும். ஒற்றையாட்சி அரசின் கீழ் எந்த அதிகாரப் பரவலாக்கமும் சாத்தியமில்லை என்று நீதிமன்றங்கள் திரும் பத்திரும்ப கூறியிருக்கும்போது 13 ஆவது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தல் எவ்வாறு நடக்கமுடியும் ? அதனால் 13 ஆவது திருத்தம் இனப்பிரச்னைக்கான அரசியல் தீர்வின் தொடக்கப் புள்ளியாகக் கூட ஒருபோதும் இருக்க முடியாது – என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article