உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம், தமது கூட்டணி முன்னிலை பெற்றுள்ள சபைகளில் முதல்வர் மற்றும் தவிசாளர் பதவிகளுக்கு உறுப்பினர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி அறிவித்துள்ளது.
அதேநேரம், எந்தவொரு தேசிய கட்சி ஆட்சி அமைப்பதற்கும் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ள ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இலங்கைத் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் ஆகியவற்றுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு அதிகமான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் வெளிப்படுத்தியுள்ளது.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றிருந்தது. இதன்போது, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கூட்டணியின் செயலாளர் இரட்னலிங்கம்(குரு), சிவநேசன் (பவன்) ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் அதன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், செயலாளர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும், ரெலோ சார்பில் அதன் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரமும்(ஜனா), ஜனநாயகப் போராளிகள் சார்பில் அதன் செயலாளர் துளசி மற்றும் விதுரன் ஆகியோரும் சமத்துவக் கட்சியின் சார்பில் பங்கேற்றிருந்தனர்.
இந்தக் கூட்டத்தின்போது உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சுமார் மூன்று மணிநேரம் உரையாடப்பட்டது. எந்தெந்த சபைகளில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி எவ்வாறு தீர்மானங்களை எடுப்பது, யாரை ஆதரிப்பது உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளரும், இணைத்தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் 106ஆசனங்களை வட,கிழக்கில் வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் சில சபைகளில் ஆட்சியமைக்கும் வகையில் முன்னிலை பெற்றுள்ளது.
அந்த வகையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி முன்னிலைபெற்ற அனைத்து சபைகளிலும் மேயர், தவிசாளர் பதவிகளுக்கு எமது கட்சியின் உறுப்பினர்களை முன்னிறுத்துவதற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய சபைகளில் தமிழ்க் கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவினையும், ஒத்துழைப்பினையும் அளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சில சபைகளில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸுடன் இணைந்து நாம் சபைகளில் ஆட்சியமைக்கலாம். சில சபைகளில் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கலாம்.
அந்;தவகையில், நாம் ஆட்சியமைப்பதற்கு முயற்சி செய்யும் சபைகளுக்கும் அத்தரப்பினர் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளோம் என்றார்.
இதேவேளை, செட்டிகுளம் பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கே ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஆதரவு வழங்கும் என்று அதன் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளரும், ஊடகப் பேச்சாளருமான க.துளசி தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் பிரதேச சபையைப் பொறுத்த வரை ஐக்கிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளது. அங்கு ஆட்சி அமைப்பதற்காக எமது ஆதரவைக் கோரியும் உள்ளது. அந்த வகையில், தமிழரசுக் கட்சியும் அங்கு ஆசனங்களைப் பெற்றுள்ளமையால் செட்டிகுளம் பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கான முழுமையான ஆதரவை ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி வழங்கும்.
வவுனியா மாநகரசபை அமைக்கும் விடயத்தில் சுயேட்சைக் குழுக்கள் மற்றும் ஏனைய வெற்றி பெற்ற கட்சிகளுடன் பேச்சுக்கள் நடத்தி வருகின்றோம். தமிழரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுடன் மேற்கொண்ட பேச்சுக்களின் அடிப்படையில் மூன்று கட்சிகளில் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு உதவுவது என்று தான் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், செட்டிகுளம் பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளது. அதற்கு நாம் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்குவோம் எனத் தெரிவித்தார்