இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரி தொடர்பான கலந்துரையாடல்கள் எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் வொஷிங்டனில் நடைபெற உள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தலைமையிலான குழுவொன்று நியூயோர்க் பயணமாகியுள்ளது.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தொடர்ச்சியான இராஜதந்திர ஈடுபாடு மற்றும் பொருளாதார பேச்சுவார்த்தையின் இரண்டாவது சுற்றுக் கலந்துரையாடலாக இது இடம்பெறவுள்ளது.
சர்வதேச வர்த்தகக் கொள்கை மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் சார்பாகப் பேச்சுவார்த்தைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் அழைப்பின் பேரில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் பல உலக நாடுகளுக்குப் பரஸ்பர வரி அதிகரிப்புகளை மேற்கொள்வதற்குத் தீர்மானித்திருந்தது.
அந்த வகையில், இலங்கை மீதும் 44 சதவீத வரியை விதித்துள்ளது.
எவ்வாறாயினும், கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் அமுலாகவிருந்த இந்த வரி விதிப்புகள் அன்றிலிருந்து 90 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த வரியிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக இலங்கை முன்னதாக அமெரிக்காவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.