திருமலை கடலில் மிதந்த ஆளில்லா விமானம்! மீனவர்கள் மீட்டனர்!

Editor 1

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் ஒன்று திருகோணமலை கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை விமானப் படை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

குறித்த ஆளில்லா விமானம் நேற்று அதிகாலை கடற்றொழிலாளர்களினால் திருகோணமலை கடல் பகுதியில் வைத்து அவதானிக்கப்பட்டுள்ளது. 

திருகோணமலை கரையில் இருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் குறித்த ஆளில்லா விமானம் மிதந்துள்ளது. 

அதனை கைப்பற்றி தமது படகில் இணைத்து கொண்ட மீனவர்கள் அது தொடர்பில் கடற்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற கடற்படையினர் விமானத்தை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். 

டார்கட் ட்ரோன் என அழைக்கப்படும் குறித்த ஆளில்லா விமானம் பயிற்சிகளில் போது பயன்படுத்தப்படும் விமானமாகும் என விமானப் படை ஊடக பேச்சாளர் குரூப் கெப்டன் எரந்த கீகனகே தெரிவித்துள்ளார். 

அந்த ஆளில்லா விமானம் பல வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இருந்து நாட்டுக்கு வந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article