வெயில் காலமாகையால் தகிக்கும் வெப்பத்தில் வெளியிடங்களுக்குச் செல்லும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
சூரிய ஒளியால் ஏற்படும் தோல் நோய்கள் அதிகம். உடலின் எந்தப் பகுதியில் அதிக அளவில் சூரிய ஒளி படுகிறதோ அந்த இடத்தில் நோய் வரும்.
அதிக அளவிலான சூரியக்கதிர்கள் உடலில்படுவதால் தோல் சிவந்து, தடித்து கருகுவதுடன், தோலில் சுருக்கங்கள் தோன்றி கட்டிகளும் ஏற்படுகின்றன.
இதற்குக்காரணம் சூரியக்கதிர்களில் உள்ள புறஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகமாக இருப்பதினால்தான் என்கின்றனர் மருத்துவர்கள்.
எனவே காலை பத்துமணிமுதல் மாலை நான்கு மணி வரை உள்ள வெயிலில் புறஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் இந்த நேரத்தில் வெயிலில் செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
வெயில் காலத்தில் அதிகளவு வியர்வை வெளியேறுவதால், உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும். அப்போது தண்ணீர் குடிக்காமல் விட்டால் சிறுநீரகத்தில் கல், சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சனை, தோல் உலர்ந்து போதல் போன்ற பிரச்சனைகள் தோன்றும்.
அதிகம் தண்ணீர் குடிப்பது, பழங்கள் மற்றும் பழச்சாறுகள் எடுத்து கொள்வது ஆகியவற்றின் மூலம் தோல் பளபளப்பாக இருப்பதுடன் கோடையால் உடலில் உருவாகும் பிரச்னைகளில் இருந்தும் தப்பிக்கலாம்.
வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்டவைகளையும் தினமும் சேர்த்துக் கொள்ளவும். அதேவேளை, முள்ளங்கி, புடலங்காய், பூசணி உள்ளிட்ட நீர்க்காய்களை சமையலில் சேர்ப்பதன் மூலம் சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதைத் தடுக்க முடியும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தோடம்பழம், தேசிக்காய் உள்ளிட்ட பழ வகைகள் அவசியம் சாப்பிடவும். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
அதிலும் மிக முக்கியம் எண்ணெயில் பொறித்த உணவு வகைகளுக்கு பதிலாக ஏதாவது ஒரு பழ வகை எடுத்துக் கொள்வது மிக நல்லது.