ஜனவரியில் சீனா செல்கிறது ஜனாதிபதி அனுர தலைமையிலான குழு!

Editor 1

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர் வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி சீனாவுக்கு செல்கிறார்.

இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்டவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வாவும் பெரும்பாலும் ஜனாதிபதியுடனான சீன விஜயத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், பிரதமர் லி கியாங், வெளிவிவகார அமைச்சர் வோங் யீ மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டோங் ஜூன் உட்பட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரையும் பெய்ஜிங்கில் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

இதேவேளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவுக்கு பீஜிங்கில் அமோக வரவேற்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் சன் ஹையன் விஜயத்துக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கையில் செம்ரெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து நவம்பர் மாதம் 14ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல்
இடம்பெற்று நிலையானதொரு அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னர் தனது முதல் விஜயமாக ஜனாதிபதி அநுர குமார கடந்த வாரத்தில் இந்தியாவுக்கு
விஜயம் செய்திருந்தார்.

சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்திருந்த ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை தொடர்ந்து தற்போது சீன விஜயத்துக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 12ஆம் திகதி சீனா செல்லும் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தலைமையிலான குழு 17ஆம் திகதி வரை பீஜிங்கில் தங்கியிருந்து இரு தரப்பு
கலந்துரையாடல்களை முன்னெடுக்கும்.

இந்த விஜயத்தின்போது, சீன – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், துறைமுகநகர் முதலீடுகள், அம்பாந்தோட்டையில் உத்தேசிக்கப்படுகின்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சீனக் கப்பல் விஜயங்கள் உட்பட பல்வேறு இரு தரப்பு ஒத்துழைப்புகள் குறித்து பரந்தளவில் பேச்சுவார்த்தைகள்
முன்னெடுக்கப்பட உள்ளன.

குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான இணக்கப்பாட்டை கடந்த அரசாங்கத்துடன் எட்டப்பட்டிருந்தது.

ந்நிலையில், தற்போது அம்பாந்தோட்டையில் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பாரிய முதலீட்டில் நிர்மாணிக்க சீனா ஆர்வத்துடன் நடவடிக்கை எடுத்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய சுத்திகரிப்புநிலையத்தை அம்பாந்தோட்டையில் உருவாக்குவதே சீனாவின் திட்டமாகஉள்ளது.

இதனை தவிர இலங்கையுடனான கடன் மறுசீரமைப்புகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழு சீனத் தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உள்ளது.

மேலும் இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவதற்கான புதிய முதலீடுகள் குறித்தும் பீஜிங் பேச்சுவார்த்தைகளின்போது அவதானம் செலுத்தப்படும்.

அது மாத்திரமின்றி சீனக் கப்பல்கள் வருகை குறித்து இராஜதந்திர நெருக்கடிகளை இலங்கை எதிர்கொள்கிறது.

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் மூலோபாய ஒத்துழைப்புகளை முன்னிலைப்படுத்தி சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கான விசேடஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இதனடிப்படையில் பல சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வந்தன.

இருப்பினும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி காலத்தில் ஏற்பட்ட இராஜதந்திர
நெருக்கடியால் சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைவது
ஒரு வருட காலத்துக்கு நிறுத்தப்பட்டது.

அந்த கால எல்லை எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவடைகின்ற தருணத்தில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீனாவில் தங்கியிருப்பார்.

எனவே இலங்கைக்கு சீனக் கப்பல்கள் விஜயம் செய்வது டர்பிலானஇராஜதந்திர அணுகுமுறை முன்னிலைப்படுத்தி இருதரப்பு பேச்சுக்கள் முன்னெடுக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article