ஜனவரி முதல் வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணையாளர்!

Editor 1

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்களை கோரும் வகையில் சட்டத்திருத்தம் அடுத்த மாதத்துக்குள் நிறைவேற்றப்பட்டால், பெப்ரவரி மாதமளவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க முடியும் எனவும் ஜனவரி முதல் வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.
ரத்நாயக்க தெரிவித்தார்.

சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்
இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதை வரவேற்கிறோம்.

அரசியலமைப்பின் பிரகாரம் உரிய காலத்தில் தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்துவதற்கு உரிய
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த நிலையில் நிதி மற்றும் இதர காரணிகளால் திட்டமிட்டதற்கமைய தேர்தலை நடத்த முடியாமல் போனது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அவதானம் செலுத்தியிருந்த நிலையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கமைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

ஆகவே அரசியலமைப்பின் பிரகாரம் ஒரு மாத காலத்துக்குள் பொதுத்தேர்தலை நடத்தினோம்.

பொதுத்தேர்தலைத் தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்திருந்த நிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்து, புதிதாக வேட்புமனுக்களை கோருமாறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களின் பிரகாரம் தேர்தலை நடத்துவதில்
பல சிக்கல்கள் காணப்படுவது அவதானிக்க முடிகிறது.

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து உறுதியான தீர்மானத்தை அறிவிப்பதாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

இதற்கமைய ஜனவரி முதல் வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
குறித்து அறிவிப்போம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்களை கோரும் வகையில் சட்டமூலத்தை ஜனவரி மாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி மாதமளவில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் பெப்ரவரி மாதமளவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க முடியும் என்றார்.

Share This Article