இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியதாக அண்மையில் அறிவித்த மாவை சேனாதிராஜாவின் பதவி விலகலை மீளப்பெற அனுமதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் அடுத்த கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தத் தீர்மானிக்கப்படவுள்ளது.
இதற்காக இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழு எதிர்வரும் 28 ஆம் கூடவுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் இன்று இடம்பெற்றது.
இந்த கூட்டத்தைத் தலைமை தாங்குபவர் தொடர்பில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் இன்று முற்பகல் 10மணிக்கு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்தநிலையில் இன்றைய கூட்டத்தில் வழமையைவிட அதிகமான மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த கூட்டத்தை ஆரம்பிப்பதற்கு இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பத்மநாதன் சத்தயலிங்கம் முற்பட்டார்.
இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா வருகைதராமல் கூட்டத்தை நடாத்தவேண்டாம் என தெரிவித்திருந்தார்.
இதனால் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
அவர் பதவி விலகிவிட்டார் அவரின் தலைமையில் கூட்டம் நடித்த முடியாது எனவே உடனடியாக கூட்டத்தை ஆரம்பிக்குமாறு சிலர் கோரியிருந்தனர்.
மத்திய செயற்குழு கூட்டத்தை உபதலைவர் தலைமையில் உடனடியாக நடத்துங்கள் அல்லாவிடில் குழப்புபவர்களை வெளியேற்ற வேண்டியேற்படும் என சிலர் தெரிவித்திருந்தார்.
தனது நிலைப்பாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனும் விடாப்பிடியாக இருந்தமையினால் நீண்டநேரமாகக் கூட்டம் ஆரம்பிக்கப்படாமல் அமைதியின்மை நிலவியது. இந்நிலையில் 10.30அளவில் கூட்டம் இடம்பெறும் மண்டபத்திற்கு மாவை சேனாதிராஜா வருகைதந்தார்.
இதன்போது, பதவி விலகியவர் தலைமையில் கூட்டத்தை நடத்த முடியாது என சிலர் தெரிவித்தனர்.
அதேநேரம், பதவி விலகலை மாவை சேனாதிராஜா மீளப் பெற்று விட்டதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்தநிலையில், மாவை சேனாதிராஜாவின் பதவி விலகலை மீளப்பெற அனுமதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் அடுத்த கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியிலிருந்து விலகி ஏனைய கட்சிகளில் வாக்கு கோரியவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க இன்றைய கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.