தேசிய இனப்பிரச்னை விடயத்தை விரைவாக தீர்த்து வைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேரும் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்காவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.
மட்டு. ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
கடந்த வாரம் புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து எமது நாடாளுமன்ற குழுத்தலைவர் சிறீதரன் தலைமையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேரும் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவுடனான சந்திப்பினையும் மேற்கொண்டிருந்தோம்.
இதன் போது தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பில் நாங்கள் வெளிப்படுத்தியிருந்தோம்.
அதில் முதலாவதாக தேசிய இனப்பிரச்னை தொடர்பான விடயத்தை நியாயமான அடிப்படையில் மிகவும் விரைவாக தீர்த்து வைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தோம்.
அத்துடன் இராணுவத்தினராலும், குடியேறிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற காணிகள் விடுவிப்பு விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது-என்றார்.