அரிசி ஆலைகளின் தகவல்களைத் திரட்ட அரசாங்கம் நடவடிக்கை!

Editor 1

அரிசி ஆலை உரிமையாளர்கள் உற்பத்தி செய்யும் மொத்த அரிசியின் அளவு, கையிருப்பின் அளவு மற்றும் சந்தைக்கு வெளியிடப்பட்ட அரிசியின் அளவு உள்ளிட்ட அறிக்கைகளை பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இதன்படி, நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் இந்த அறிக்கைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. 

பொலன்னறுவை பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய எதிர்காலத்தில் அனைத்து அரிசி ஆலைகளின் தகவல்களையும் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அந்த அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார். 

ஜனாதிபதி, வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. 

அத்துடன், ஒரு கிலோகிராம் வெள்ளை பச்சரிசியை 215 ரூபா என்ற மொத்த விற்பனை விலையிலும், 220 ரூபாய் என்ற சில்லறை விற்பனை விலையிலும், விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். 

அதேநேரம், இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசியை 220 ரூபாவுக்கும், சம்பா அரிசி ஒரு கிலோகிராமை மொத்த விற்பனையில் 235 ரூபாவுக்கும், சில்லறை விற்பனையில் 240 ரூபாவுக்கும், கீரி சம்பா கிலோகிராம் ஒன்றை மொத்த விலையில் 255 ரூபாவுக்கும், சில்லறை விலையில் 260 ரூபாவுக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

இருப்பினும் கீரி சம்பா அரிசி தற்போதுள்ள விலைக்கே விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article