பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவராக நாமல் ராஜபக்ஷவை முன்னிறுத்துவதற்கான செயற்திட்டங்களை அக்கட்சி முன்னெடுத்துள்ளதாக
தெரியவருகின்றது.
அதன் பிரகாரம் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போதும் பொதுஜன பெரமுன கட்சியை நாமல் ராஜபக்ஷவே வழிநடத்துவார் என்று அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிட்ட நாமல் 342,781 வாக்குகளைப் பெற்று வெறும் இரண்டரை வீத வாக்குகளுடன் நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
எனினும் கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது பொதுஜன பெரமுனவை நாமல் ராஜபக்ஷவே வழிநடத்தினார்.
இந்நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ஷவே வழிநடத்துவார் எனவும்,
இரண்டாம் தலைமைத்துவத்தை உருவாக்குவதற்கான ஒத்திகை களமாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் பயன்படுத்தப்படவுள்ளது எனவும் பொதுஜன பெரமுன கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் மூலமாக வெகுவிரைவில் பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக நாமல் ராஜபக்ஷவை முன்னிறுத்துவதற்கான களத்தை உருவாக்கும் செயற்திட்டங்களை அக்கட்சி முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், பொதுஜன பெரமுண கட்சியின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ஷ, தற்போதைய நிலையில் இலங்கைக்கு திரும்பி
வரும் உத்தேசத்தில் இல்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை திரும்பி வரும் பட்சத்தில் கடந்த நல்லாட்சிக் காலத்தில் போன்று வழக்குகளில் சிக்கி, சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்ற அச்சம் காரணமாக தற்போதைக்கு அவர் இலங்கை திரும்பும் உத்தேசத்தில் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.