மாகாணசபை முறைமையை நீக்க இதுவரை தீர்மானமில்லை – அரசாங்கம் அறிவிப்பு!

Editor 1

மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை எடுக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார். 

புதிய அரசியலமைப்பைக் கொண்டுவர 3 வருடங்கள் வரை செல்லும். 

அதனால் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்ற முறைமை தொடர்பில் தமது பரிந்துரைந்துகளை அனைவரும் முன்வைக்கலாம். புதிய அரசியலமைப்பு மக்களுடனான கலந்துரையாடலின் பின்னரே கொண்டுவரப்படும். 

இது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்துவதற்கு போதிய கால அவகாசம் உள்ளது. 

எனவே, மாகாண சபை முறையை ஒழிப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தை இதுவரை எடுக்கவில்லை. 

மாகாண சபை முறைமை புதிய அரசியலமைப்பில் தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு அப்பாலான அதிகாரங்கள் வழங்கப்படாது எனவும் தற்போதைய அதிகாரங்கள் குறைக்கப்படாது எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இதேவேளை, 13ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து, தேசிய மக்கள் சக்தியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, அறிக்கையொன்றை விடுத்துள்ளார். 

இந்தவிடயம் தொடர்பில் விளக்கமளித்துள்ள அவர் 1987 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட 13 ஆம் திருத்தச்சட்டம் வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்கத் தவறியுள்ளது என தெரிவித்துள்ளார். 

அதற்கமைய, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு மிகவும் நடைமுறைச்சாத்தியமானதும் சரியானதுமான தீர்வினை முன்வைக்க வேண்டியுள்ளது. 

எனவே மிகச்சிறந்த தீர்வினை முன்வைத்து நடைமுறைப்படுத்தும்வரை 13வது திருத்தத்தையும் மாகாணசபைகளையும் ஒழிக்கப்போவதில்லை எனவுமே தாம் கூறியதாகத் தேசிய மக்கள் சக்தியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article