பெப்ரவரி ஐ.நா பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்பாக உள்ளகப்பொறிமுறையை நிறுவவேண்டும் – பேராசிரியர் பிரதிபா மஹநாமஹேவா!

Editor 1

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் நிராகரித்திருக்கின்ற போதிலும் அது மாத்திரம் போதுமானதன்று எனவும், அதற்கு அப்பால் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது பற்றி சிந்திக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் பேராசிரியர் பிரதிபா மஹநாமஹேவா, எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்பதாக நாம் பொருத்தமானதொரு உள்ளகப்பொறிமுறையை நிறுவவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

IDM Nations Campus இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நுனர்யவ EdHat International கல்வி நிலையத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச உறவுகள் மற்றும் சட்டம் தொடர்பான சர்வதேச ஆய்வு மாநாடு திங்கட்கிழமை (02) கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே பிரதிபா மஹநாமஹேவா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் தொனிப்பொருள் குறித்தும், மனித உரிமைகளை உறுதிப்படுத்திப் பாதுகாக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச கட்டமைப்புக்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சாசனங்கள், பிரகடனங்கள் குறித்தும் அவர் சுருக்கமாகக் கருத்துரைத்தார்.

அதன்பிரகாரம் ஐக்கிய நாடுக்ள மனித உரிமைகள் பேரவையானது சாதாரண மக்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தியும், அவற்றை உறுதிப்படுத்தவேண்டிய கடப்பாட்டை அரசாங்கங்கள் மீது விதித்தும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் 51ஃ1 என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அதன்பிரகாரம் இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து ஆதாரங்களைத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட பிரதிபா மஹநாமஹேவா, ஆனால் அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றியுடன் இவ்விடயங்களில் எமக்கு ஏற்றவாறான சாதக மாற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அதேபோன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் நிராகரித்திருக்கின்ற போதிலும், அது மாத்திரம் போதுமானதன்று எனவும், அதற்கு அப்பால் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது பற்றி சிந்திக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் நிறுவப்பட்டிருக்கின்ற போதிலும், அவ்வலுவகம் என்ன செய்கிறது? எனக் கேள்வி எழுப்பிய மஹநாமஹேவா, எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடருக்கு முன்பதாக நாம் பொருத்தமானதொரு உள்ளகப்பொறிமுறையாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவவேண்டும் என்று வலியுறுத்தினார்.

Share This Article