பெண் வேட்பாளர், கணவன் மீது பிள்ளையான் ஆதரவாளர்கள் தாக்குதல் – க.இன்பராசா குற்றச்சாட்டு!

முன்னாள் பெண் வேட்பாளர், கணவன் மீது பிள்ளையான் ஆதரவாளர்கள் தாக்குதல் - க.இன்பராசா குற்றச்சாட்டு!

Editor 1

பிள்ளையானின் ஆதரவாளர்களினால் தமது வேட்பாளர் மற்றும் அவரது கணவன் தாக்கப்பட்டதாகவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

நாங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கட்சியின் சார்பாக. யாழ் மாவட்டம், வன்னி மாவட்டம், திருகோணமலை மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றோம்.

கடந்த 31 ஆம் திகதி இரவு இரவு மட்டக்களப்பு நொச்சிமுனை என்ற இடத்தில் எங்களது பெண் வேட்பாளர் தாக்கப்பட்டு இருக்கின்றார். அவரின் கணவரும் தாக்கப்பட்டுள்ளார்.

அவர்கள் இன்று வரை வைத்தியசாலையில் இருக்கின்றார்கள். தாக்கப்பட்டவர் முன்னாள் போராளி. தாக்கியவர்கள் நால்வரும் வீட்டுக்கு வந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் கட்சிக்கு ஏன் ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்று திலீபன் சுவாசினியிடம் கேட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து அது எங்களது விருப்பம் என கணவர் தெரிவித்திருக்கின்றார்.
இதன்போது கணவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.வெளியில் இழுத்துச்சென்றுதாக்கியுள்ளனர்.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸில் முறையிட்டுள்ளனர். சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் தான் இந்த சம்பவம் நடந்தது. நிச்சயமாக இதற்கு
அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்-என்றார்.

Share This Article