முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வின் ஏழாம் நாள் அகழாய்வுப் பணிகளின் நிறைவில், மூன்று மனித எலும்புக் கூட்டுத்தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வின், ஏழாம் நாள் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரிகளின் கண்காணிப்புகளின் கீழ் தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ச்சியாக இடம்பெறும் அகழாய்வுப் பணிகளில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளிலிருந்து மூன்று மனித எலும்புக் கூட்டுத்தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.
அகழாய்வுகளின்படி, இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டாம் கட்ட பணிகளின் போது அந்த மனிதப்புதைகுழியிலிருந்து 40 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள், இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று மீட்கப்பட்ட மூன்று மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகளுடன் மொத்தம் 43 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.