அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கும் வரியை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகம்கொடுக்க நேரிடும் அபாயம் இருக்கிறதென ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் இலங்கைக்கு விதித்திருக்கும் 44வீத தீர்வை வரி அதிகரிப்பு, எமது ஏற்றுமதி பொருளாதாரத்துக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. ஏனெனில் எமது ஏற்றுமதியில் அமெரிக்காவுக்கே அதிக ஏற்றுமதிகளை மேற்கொள்கிறோம். 2024ஆம் ஆண்டில் எமது நாடு 12.7 பில்லியன் டொலர் வரை ஏற்றுமதி செய்திருக்கிறது.
அதில் 3 பில்லியன் டொலர் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது.எமது மொத்த ஏற்றுமதியில் நூற்றுக்கு 23சதவீதம் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த 23சதவீதத்துக்கும் அமெரிக்காவின் வரி அதிகரிப்பு தாக்கம் செலுத்தும். இதில் ஆடை தொழிற்சாலைக்கே பாரிய பாதிப்பு ஏற்படப்போகிறது. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 3 பில்லியன் டொலரில் 2 பில்லியன் டொலர்கள் ஆடை உற்பத்தியாகும்.
அதனால் அமெரிக்காவின் இந்த தீர்வை வரி அதிகரிப்பால் எமது ஆடை தொழிற்சாலைகளுக்கு பாரிய தாக்கம் செலுத்தம் அபாயம் இருக்கிறது. அதனால் எங்களுக்கு ஆடை விலை அதிகரித்து ஏற்றுமதி செய்யும்போது எமது ஆடைகளுக்கான கேள்வி குறைந்துவிடும்.
எமக்கு ஏனைய நாடுகளுடன் போட்டியிட முடியாத நிலைமை ஏற்படும். இதன் காரணமாக நாட்டில் ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டு, பாரியளவில் தொழில் இல்லாமல் போகும் அபாயம் இருக்கிறது.இதுதொடர்பில் ஆராய்ந்து பார்க்க ஜனாதிபதி குழுவொன்றை அமைத்திருக்கிறார். ரணில் விக்ரமசிங்க கொண்டுவந்த அதிகாரிகளைக்கொண்டே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
ரணிலின் இந்த அதிகாரிகளை விரட்டுவதாகவே அரசாங்கம் ஆரம்பத்தில் தெரிவித்து வந்தது. ஆனால் தற்போது ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரிகளை வைத்துக்கொண்டே அரசாங்கம் பொருளாதாரத்தை செயற்படுத்தி வருகிறது. குழு அமைத்து பிரயோசனம் இல்லை. இதற்கு அரசியல் தலைமைத்துவ வழிகாட்டல் மற்றும் சர்வதேச முகாமைத்துவம் ஒன்று இருந்தாலே இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடியுமாகும்.
அதேநேரம் அரசாங்கம் எந்த திட்டமும் இல்லாமல் வருமான வரிகளை குறைத்துக்கொண்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய எந்த திட்டமும் இல்லாமலே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
அதனால் அரசாங்கம் பொய் உரைப்பதை கைவிட்டு உண்மை நிலைமையை மக்களுக்கு தெரியப்படுத்தி உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.
அதேநேரம் நாட்டில் மீண்டும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு இந்த நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு செல்லும்.
அதேபோன்று எரிவாயு விலை அதிகரித்துள்ளதால் ஹோட்டல்களில் தேநீரின் விலையை 10ரூபாவால் அதிகரிக்க ஹோட்டல் உரிமையாயளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. முட்டை விலையை அரசாங்கம் வேண்டுமென்றே அதிகரித்துள்ளது. முட்டைக்கு 18வீத வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் முட்டை விலை 10ரூபா வரையாவது விலை அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது.
அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளபோதும் அது ஏற்கனவே வழங்கப்பட்டுவந்த கொடுப்பனவுகளை நீக்கியே இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதனால் அடுத்த மாத சம்பளத்தில் அவர்கள் எதிர்பார்க்கும் சம்பள அதிகரிப்பு கிடைக்கப்போவதில்லை. ஆனால் அரசாங்கத்தின் இந்த சம்பள அதிகரிப்பு, குறித்த அரச ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, அவர்களுக்கு பூரண நண்மை கிடைக்கிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.