கடமைக்குத் திரும்பாத தொடருந்து நிலைய அதிபர்கள் உள்ளிட்ட தொடருந்து திணைக்கள அலுவலர்கள், பணியிடை விலகியவர்களாக கருதி, கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தொடருந்து திணைக்கள பொது முகாமையாளரால், தொடருந்து நிலையங்களின் அதிபர்களுக்கு இந்தக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகப் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் திடீர் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர்.
தொடருந்து சேவை அத்தியாவசியச் சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்றையதினம் 12 மணிக்குள் கடமைக்குத் திரும்பாதவர்கள் பணியிடை விலகியவர்களாகக் கருதப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதன் அடிப்படையில் நேற்று மதியம் 12 மணிக்குள் கடமைக்கு திரும்பாத தொடருந்து திணைக்களப் பணியாளர்கள் அனைவரும் பதவி விலகியவர்களாகக் கருதப்பட்டு, அவர்களுக்கான கடிதங்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.