வடக்கின் மின் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு விற்க முடியும் – மன்னாரில் ஜனாதிபதி!

வடக்கின் மின் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு விற்க முடியும் - மன்னாரில் ஜனாதிபதி!

Editor 1

வடக்கு மாகாணம் பசுமை சக்தியை பெருமளவில் கொண்டுள்ளது. குளங்கள், காற்றாலைகள், சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையங்களை அமைப்பதன் மூலம் அதிக மின் சாரத்தை உற்பத்தி செய்யமுடியும். அதனை இந்தியாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் விற்பனை செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பைப் பெறமுடியும் – இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மிகுதி மின்சாரத்தை இந்தியாவுக்கு விற்பது தொடர்பில் பேச்சு நடைபெறுகிறது என்றும் கூறினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று மன்னார் மாவட்டத்துக்கு வருகை தந்தார்.

மன்னார் மாவட்ட செயலகத்தில் நடந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

மூன்று தசாப்தகால யுத்தத்துக்கு முகம் கொடுத்த மன்னார் மாவட்டம் இன்று
வளர்ச்சி கண்டு வருகிறது.

இந்த மாவட்டத்தின் விரிவான அபிவிருத்தி மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பை வழங்கும். மன்னாரில் சுற்றுலா, மீன்பிடி தொழில் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை பெற்றுகொள்வதற்கான
வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

இதேபோல் மன்னாரில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாகவே உள்ளன. தேவைக்கு மிகுதியான வலு சக்தியை இந்தியாவுக்கு விற்பனை செய்வது குறித்து அந்நாட்டு அரசாங்கத்துடன்
பேச்சு நடத்தப்படுகிறது.

வடக்கு மாகாணமானது பசுமை சக்தியை பெருமளவில் கொண்டுள்ளது.

குளங்கள் மற்றும் காற்றாலைகள் மற்றும் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையங்களை அமைப்பதன் மூலம் அதிகளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அந்த சக்தியை இந்தியாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் விற்பனை செய்வதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பை பெற்றுக் கொள்ளவும் முடியும். பசுமை வலுசக்தி மற்றும் பசுமை ஐதரசன் என்பவற்றை கொண்டு பசுமை பொருளாதாரத்தையும் உருவாக்க முடியும்.மன்னாரில் புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு தேவையான நிதி எதிர்காலத்தில் வழங்கப்படும்.

புத்தளம் – மன்னார் வீதியை திறப்பது குறித்தும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க முடியும்.

மன்னார் மருத்துவமனைக்கு சி. ரி.ஸ்கான் இயந்திரம் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நவீன விவசாயத்தை உருவாக்கு வதற்கான முறையான திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். அதற்குத் தேவையான வசதிகளை பெற்றுக்கொள்வதற்கு அபிவிருத்தி குழு கூடி கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்குமாறு அறிவுறுத்துகிறேன். இந்தப் பிரதேசத்தில் உள்ள குளங்களைப் பாதுகாப்பதற்கும் மல்வத்து ஓயா திட்டத்தில் இருந்து மன்னாருக்கு வரும் நீரை பாதுகாப்பதற்கும் முறையான வேலைத்திட்டமொன்று விரைவாக தேவைப்படுகிறது.

அடுத்த ஐந்து தசாப்தங்களுக்குள் உலர் வலய பகுதிகளில் மழை அதிகரிக்கும் என்றும் வறண்ட பகுதிகளுக்கு மழை கிடைக்காமல் போகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதற்கான தீர்வுகளை இப்போதிருந்தே தேட ஆரம்பிக்க வேண்டும் – என்றும் அவர் கூறினார்.

Share This Article