ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற மூலோபாயம் பயனற்றது. தென்னிலங்கையில் உள்ள தலைவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்தே இறுதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அதேநேரம், தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற ஆணையைத் தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள் நிராகரித்து வருகின்ற நிலையில் தேர்தல்களைத் தொடர்ச்சியாக நடத்தப்படுவதற்கு அப்பால் தமிழ் மக்களின் ஆணையை ஏற்றுக்கொள்வதற்கான அழுத்தங்களையும் பிரயோகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவானது, நேற்றையதினம் கொழும்பில் உள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் அவரைச் சந்தித்தது. குறித்த சந்திப்பில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தார்.
இச்சந்திப்பின்போது சம்பந்தன் ஐரோப்பிய ஒன்றியக் குழுவினரிடத்தில் கருத்து வெளியிடுகையில்,
தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தமது நீண்டகால அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை அடிப்படையாக் கொண்டே ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆணை வழங்கி வருகின்றார்கள். இருப்பினும் அவர்கள் வழங்கி வருகின்ற ஆணையைக் கருத்தில் கொள்ளாது கருமங்களை முன்னெடுக்கின்ற செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.
ஆகவே ஐரோப்பிய ஒன்றியக்குழு உட்படச் சர்வதேச சமூகம் தேர்தல்களை நடத்துவதற்கான அழுத்தங்களை அளிப்பதற்கு அப்பால் தமிழ் மக்கள் வழங்கும் ஆணையை உறுதிப்படுத்துமாறு அழுத்தங்களை அதியுச்சமாகப் பிரயோகிக்க வேண்டும்.
அத்துடன் இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்பாடுகளையோ, சர்வதேசத்துடன் செய்து கோண்ட உடன்பாடுகளையோ ஏற்று நடைமுறைப்படுத்துவதாக இல்லை. அரசியலமைப்பில் உள்ள விடயங்களைக் கூட அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில் தயக்கங்களைத் தொடர்ச்சியாகக் காண்பித்து வருகின்றது.
மேலும் தமிழ் மக்கள் உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். ஆகவே அந்த உரித்து தொடர்ச்சியாக மறுக்கப்படுகின்றபோது நிச்சயமாக வெளியக சுயநிர்ணய உரித்தையும் கோருவதற்கான நிலைமைகளே உருவாகும் என்றார்.
இதேநேரம், வடக்கு,கிழக்கில் பேசுபொருளாகியுள்ள தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் சம்பந்தனிடத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் கேள்விகளைத் தொடுத்திருந்தனர். அதற்குப் பதிலளித்த சம்பந்தன்,
தமிழ் மக்களின் வரலாற்றில் பொதுவேட்பாளர் போன்ற விடயங்களை எப்போதுமே முன்னிறுத்தியது கிடையாது. அவ்விதமான நிலையில் தற்போது பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பொருத்தமற்ற அணுகுமுறையாகவே இருக்கும்.
சமகால சூழல்களின் அடிப்படையில் தமிழ்மக்களை மையப்படுத்தி பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதால் மக்களுக்கு எவ்விதமான நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை. பொதுவேட்பாளர் மூலோபாயத்தினால் எவ்விதமான நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை என்றார்.
இதனையடுத்து ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் பிரதிநிதிகள் தேர்தலை பிற்போடுவதற்கான சூழல்கள் சம்பந்தமாகவும், அதனால் ஏற்படும் சட்டச் சிக்கல்கள் சம்பந்தமாகவும் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
இதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பதிலளித்தர். அவர், இலங்கையில் ஏற்கனவே உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல், மாகாண சபைகளுக்கான தேர்தல் ஆகியன காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் தற்போது ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.
உண்மையில் எதிர்வரும் காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல் ஒத்திவைக்கப்படுகின்றபோது அதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தேர்தல்கள் நடத்தப்படாத நிலைமைக்கு இடமளிக்கப்போவதில்லை.
இதேநேரம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற அரகலய போராட்டத்துடன் பாராளுமன்றமும், ஜனாதிபதியும் மக்களின் ஆணையை இழந்து விட்டார்கள். அதன் காரணமாகவே ஜனாதிபதியும், பிரதமரும் பதவியை இராஜினாமாச் செய்திருந்தார்கள்.
அவ்விதமான நிலையில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது தான் தேர்தல் நடத்தப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதேநேரம், ஜனாதிபதி தற்போது நான்கு ஆண்டுகள் தான் பதவியிலிருந்தார். அவர் தனக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது என்ற அடிப்படையில் தேர்தலை ஒத்திவைப்பதற்கு முயற்சிக்கின்றார். ஆனால் அவரால் அவ்விதமாகத் தேர்தலை பிற்போட முடியாது. அதற்குச் சட்டத்தில் எந்த இடமும் வழங்கப்படவில்லை.
தற்போதைய ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர் அவரால் ஆறு ஆண்டுகள் பதவியில் இருக்க முடியாது. ஆகவே அரசியலமைப்பின் பிரகாரம் அவர் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்றார்.