மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரையில் கால்நடைகள் துப்பாக்கியால் சுடப்பட்டும் உணவில் வெடிபொருள் வைத்தும் – வெட்டியும் கொல்லப்படுகின்றன.
இராணுவம், பொலிஸின் துணையுடனேயே இந்த அநீதி செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மயிலத்தமடுவில் 2013ஆம் ஆண்டுவரை தமிழ் மக்கள் பிரச்னையின்றி கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்தனர்.
2013இல் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது. அன்றுமுதல் தமிழ் கால்நடை பண்ணையாளர்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
தமிழரின் நிலம் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்படுகின்றது – இவ்வாறு கொழும்பு தேசிய
கிறிஸ்தவ சங்கத்தில் நடந்த உரையாடலில் மயிலத்தமடு – மாதவனை பிரச்னை தொடர்பில் கருத்து வெளியிட்ட ஒன்றியத்தின் தலைவர் சிவயோகநாதன் தெரிவித்தார்.
இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்து 270 நாட்கள் கடந்துவிட்டன – பிரச்னை இன்னும் நீள்கிறது. மாதவனையில் தமிழர்களை போன்று கால்நடைகளும் காணாமல் ஆக்கப்படுகின்றன. சட்டவிரோதமாக மின்சார வேலியை அமைத்து கால்நடைகள் கொல்லப்படுகின்றன.
உணவுக்குள் வெடிபொருட்களை வைத்தும் – துப்பாக்கியால் சுட்டும் – வெட்டியும் கால்நடைகளை கொல்கிறார்கள். இதுவரை 400இற்கும் மேற்பட்ட கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன. மேய்ச்சல்தரை பறிபோனதால் கால்நடைகளுக்கு உணவளிக்க முடியவில்லை.
ஆயிரத்து 400இற்கும் மேற்பட்ட கால்நடைகள் உணவின்றி உயிரிழந்தன. பண்ணையாளர்களும் ஆக்கிரமிப்பாளர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். அவர்களை பொலிஸார் கைது செய்கின்றனர்.
வனஜீவராசிகள் திணைக்களம், வனவளத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தித் அதிகார சபை ஆகியவை மாதவனைக்கு உரிமை கோருகின்றன. இவை அனைத்தும் தமிழ் பண்ணையாளர்களை வஞ்சிக்கின்றன.
மட்டக்களப்பில் 7 இலட்சம் கால்நடைகள் உள்ளன. மாதவனையில் மட்டும் 3 இலட்சம் கால்நடைகள் உள்ளன.
பெரும்போக செய்கையின்போது ஒரு இலட்சம் கால்நடைகள் மாதவனைக்கு மேய்ச்சலுக்கு செல்கின்றன. இவை உணவின்றி தவிக்கின்றன. இதனால், பால் உற்பத்தி பல மடங்கு குறைந்துவிட்டது.
ஜனாதிபதி மாதவனை தொடர்பில் விடுத்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. நீதிமன்றங்களின் கட்டளைகள்
கூட புறக்கணிக்கப்படுகின்றன.
மாதவனையில் குடியேறியோர் எமது கால்நடைகளை அழிக்கின்றனர். இராணுவம், பொலிஸாரின் உதவியுடன் இந்த அக்கிரமங்களை அவர்கள் முன்னெடுக்கின்றனர். கடந்த 6 மாதங்களாக பால் கறக்க முடியாத நிலையில் பண்ணையாளர்கள் உள்ளனர். போதிய உணவின்றி கால்நடைகள் உயிரிழக்கின்றன.
இங்கு வளர்க்கப்படும் கால்நடைகள் பல தலை முறைகளாக இங்கேயே வாழ்பவை. அவற்றுக்கு ஏற்றவிதத்தில் புதிய இடங்களை கண்டுபிடிக்க முடியாது. மயிலத்தமடுவில் கால்நடைகளுக்கான அனைத்து வளங்களும் உள்ளன. இது வேறு இடத்தில் கிடைக்காது – என்றார்.