வடக்கில் சில பாடசாலைகளில் ஒரே நாளில் வெவ்வேறு பாடங்களுக்கான பரீட்சைகளை எழுதுவதற்கு உயர்தர மாணவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
இந்த செயல்பாடு தொடர்பில் மாகாண கல்வி திணைக்களத்துக்கு முறையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று இலங்கை
ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலைகளில் தற்போது தவணைப் பரீட்சைகள் நடைபெறுகின்றன. இதில், வடக்கு மாகாண பாடசாலைகள் சிலவற்றில் ஒரேநாளில் மாகாண கல்வித் திணைக்களத்தினதும், தொண்டை மானாறு வெளிக்கள நிலையத்தினதும் பரீட்சைகள் நடைபெறுகின்றன.
இத னால், ஒரேநாளில் வெவ்வேறான பாடங்களுக்கான பரீட்சைகளை மாணவர்கள் எழுத நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்று அறிய வருகின்றது.
இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன்
திலீசனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், இந்த வருடம் சம நேரத்திலே வந்து மாகாண கல்வித் திணைக்களத்தின் பரீட்சையும் அது முடிய தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சையும் ஒரு சில பாடசாலைகளில் நடத்தப்பட்டுள்ளன. வவுனியாவில் இரண்டு பாடசாலைகள் தொடர்பில் இவ்வாறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மானிப்பாய் பகுதியிலுள்ள ஒரு மகளிர் பாடசாலை தொடர்பாகவும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. இதேபோன்று, யாழ்ப்பாணத்திலும் பிரபலமான பாடசாலை ஒன்று இவ்வாறு பரீட்சையை நடத்துவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு பரீட்சைகளையும் நடத்துவது உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். இதேவேளை, மாகாணத்தின் பரீட்சை ஒன்று நடைபெறும்போது வெளிப் பரீட்சையையும் ஊக்குவிக்கும் முகமாக அரசபாடசாலை நேரத்தில் ஓர் அரச சார்பற்ற நிறுவனத்தின் பரீட்சைகளை வைப்பது என்பது தாபன விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணான ஓர் ஏற்பாடு. இத்தகைய முறைகேடுகளை மாகாண கல்வி அமைச்சும், மாகாண கல்வித் திணைக்களமும் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது மிகப்பாரதூரமான விடயம்.
எனவே, இந்த முறைகேடுகள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் மாகாண
கல்வித் திணைக்களத்தில் முறையிட்டுள்ளது. இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கத் தவறும் பட்சத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.