யாழ்ப்பாணம் – தீவகத்தில் பாடசாலை ஒன்றின் விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவிகள் 11 பேர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். தாம் தங்கியுள்ள விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி
தங்களை அடித்துத் துன்புறுத்துகிறார் என்றும் இந்தக் கொடுமையில் இருந்து
தம்மை காக்குமாறும் கோரியே மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.
ஊர்காவற்றுறையை சேர்ந்த பெண்கள் பாடசாலை ஒன்றின் மாணவிகளே இவ்வாறு தஞ்சமடைந்தனர். இவர்கள் 10 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.
ஆங்கில உச்சரிப்பு தவறு, ஆங்கிலம் முறையாக பேசாதது, பிரார்த்தனையை முறையாக மனனம் செய்யாதது உள்ளிட்ட காரணங்களுக்காகவே விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி அகப்பை காம்பு, தடியால் தாக்கினார் என்றும் தலைமுடியை பிடித்து சுவருடன் மோதினார் எனவும் தகாத வார்த்தைகளால் திட்டினார் என்றும் மாணவிகள் கூறியுள்ளனர்.
கடந்த 3 வருடங்களாக தாம் இவ்வாறு துன்புறுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த மாணவிகள் 11 பேரும் யாழ். போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரியிடம் பரிசோதனைக்காக முற்படுத்தப்பட்டனர். அவர்களின் உடலில் அடித்ததால் ஏற்பட்ட தழும்புகள் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கைது செய்யப்பட்டார். அவர் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.