மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை
தமது பணியிலிருந்து ஓய்வுபெறவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் தனது பதவி விலகல் கடிதத்தை இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி பிரைன் உடாக்வே ஊடாக பாப்பரசருக்கு அனுப்பி வைத்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
எனினும், இந்தத் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.
அண்மைக்காலமாக தொடர்ச்சியாக உடலநலப் பாதிப்புகளை எதிர் கொண்டு வருவதாலேயே அவர் ஆயர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்று கூறப்படுகின்றது.
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஆயரான யோசப் பொன்னையா மட்டக்ளப்பை சேர்ந்தவராவார். மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்திய அந்த மாவட்டத்தை சேர்ந்த முதல் ஆயராவார்.
1980ஆம் ஆண்டு அருட் தந்தையாக பணியை ஆரம்பித்த ஆயர் யோசப் பொன்னையா, வாகரை, வீச்சுக்கல் முனை, ஆயித்தியமலை ஆகிய இடங்களில் அருட்பணியாற்றினார்.
பின்னர், மட்டக்களப்பு புனித வளனார் சிறிய குருமடத்தில் பணிப்பாளராக (1993-96) பணியாற்றிய பின்னர் அம்பிட்டி தேசிய குருமடத்தில் (1996-2001) பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
2001-06 காலப்பகுதியில் தாண்டவன்வெளி பங்கு தந்தையாக பணியாற்றிய பின்னர் 2006 இல் திருகோணமலை – மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பதில் பொறுப்பாளராகப் பதவியேற்றார். கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும்பணியாற்றினார்.
2008 பெப்ரவரியில் திருகோணமலை மட்டக்களப்பு மறை மாவட்டத்தின்
துணை ஆயராக நியமிக்கப்பட்டு, 2008 மே மாதத்தில் அதன் ஆயராகப் பதவியேற்றார்.
2012 ஜூலையில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதலாவது ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.