உமா ஓயா பல் நோக்கு அபிவிருத்தி திட்டத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இன்று புதன்கிழமை நாட்டுக்கு வருகிறார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அழைப்பில் அவர் ஒரு நாள் பயணமாக இலங்கை வருகிறார். கடந்த 2008 ஏப்ரல் ஈரானின் அப்போதைய ஜனாதிபதி மஹ்மூட் அஹமதிநெஜாட் இலங்கை வந்த பின்னர் ஈரான் ஜனாதிபதி ஒருவர் இலங்கை வருவது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.
மகாவலி திட்டத்தின் பின்னர் நாட்டின் மிகப் பெரிய நீர்ப்பாசனத் திட்டமான உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் ஈரானின் நிதி உதவியில் அமைக்கப்பட்டதாகும்.
இந்தத் திட்டத்தை இன்று புதன்கிழமை ஈரான் ஜனாதிபதியுடன் இணைந்து
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறந்து வைப்பர்.
இதேநேரம், ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும்
கைச்சாத்திடப்படவுள்ளன.