ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரி ஒருவர், தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து முக்கிய பணியொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அந்த கட்சியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
கனடா சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் வன்கூவரில் இலங்கை சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக புதிய விசாரணைகள் தேவையில்லை எனவும், விசாரணைகள் மூலம் எழுந்துள்ள பல பிரச்னைகள் குறித்து கண்டறியப்பட வேண்டும் எனவும்
அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
ஏப்ரல்- 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை நடத்தியகுற்றப் புலனாய்வு அதிகாரிகள் தற்போது ஓய்வு பெற்று தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்றிவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, விசாரணைகளை வழிநடத்திய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி ஒருவர், எதிர்வரும் மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற காவல்துறை
மன்றத்திற்கு தலைமை தாங்கவுள்ளார்.
அதனூடாக, குற்றவாளிகள் கண்டறியப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழிசெய்யப்படும்.
தாக்குதல்களுக்கு காரணமானவர்களை தமக்கு நன்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
தாக்குதலின்போது ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருந்த அவரது இந்த கருத்து மிகவும் பாரதூரமானதாகும்.
தாக்குதல்களுக்குப் பிறகும் அவர் ஏழு மாதங்கள் ஜனாதிபதியாக பணியாற்றியிருந்தார் எனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்