ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியிலான பிரச்னை உள்ளது என்று பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ஷவும், ஸ்தாபகரான பஸில் ராஜபக்ஷவும் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஸில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தியதாகவே இச்சந்திப்பு நடைபெற்றது எனவும், ஜனாதிபதி பணியாட்தொகுதி பிரதானி சாகல ரத்நாயக்கவும் இச்சந்திப்பில் பங்கேற்றுள்ளார்.
‘அதிகாரப்பகிர்வு மற் றும் அரச சொத்துகளை தனியார் மயப்படுத்தல் போன்ற செயற்பாடுகளால் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முடியாத கொள்கை ரீதியிலான பிரச்சினை உள்ளது.’ – என இதன்போது ராஜபக்சக்கள் இருவரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொலிஸ் அதிகாரத்தைதவிர ஏனைய அதிகாரங்களை பகிர்வது பிரச்சினை அல்ல எனவும், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டியது கட்டாயம் எனவும் இதற்கு ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.
அத்துடன், பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்கப்படாமை தொடர்பிலும் ராஜபக்ச தரப்பில் இருந்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை, ரணிலை ஆதரிக்கும் முடிவை கட்சி உறுப்பினர்கள் எடுக்கும் பட்சத்தில் மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் வெற்றிக்காக உழைத்தது போல ரணிலின் வெற்றிக்காக உழைப்பதற்கு தான் தயார் என இதன்போது பஸில் கூறியுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.
இந்த நடைபெற்ற சந்திப்பில் இறுதி இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை, எனினும், மீண்டும் இரு தரப்பினரும் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
அடுத்து நடைபெறவுள்ள 02 ஆவது சந்திப்பின்போது ஜனாதிபதி தேர்தல் மற்றும் மொட்டு கட்சியின் எதிர்கால திட்டங்கள் பற்றி ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்படவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சி ரணிலை ஆதரிக்குமா அல்லது வேட்பாளர் ஒருவரை நிறுத்துமா என்பதும் இக்கூட்டத் திலேயே தீர்மானிக்கப்படவுள்ளது.