கொழும்பில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பிரதேசங்களில் பொலிஸார் விண்ணப்பப் படிவங்களை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வழங்கியுள்ளனர்.
வீடுகளில் வாழும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வாடகை குடியிருப்பாளர்களின் விபரங்களைப் பதிவு செய்யும் நோக்கில் குறித்த விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே இவ்வாறான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுப் பின்னர் அவ்வாறான பதிவுகள் அவசியம் இல்லையெனக் கூறப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பொலிஸ் தலைமையகத்திடம் குறித்த பதிவுகள் தொடர்பாக கேள்வி எழுப்பவேண்டிய அவசியம் இல்லையென விளக்கமளித்திருந்தனர்.
குறிப்பாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பதிவு முறையை இரத்துச்செய்யும் விவகாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
இதனால் பொலிஸ் பதிவு முறைகள் இரத்து செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் மீண்டும் பொலிஸ் பதிவுக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
2009 மே மாதத்திற்கு முன்னரான காலத்தில் கொழும்பில் வாழ்ந்த தமிழர்கள் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பிரகாரம் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
ஆனால் போருக்குப் பின்னரான காலத்தில் அவ்வாறான பதிவு முறைகள் நீக்கம் செய்யப்பட்டிருந்தன.
இருந்தாலும் அவ்வப்போது பொலிஸார் பதிவுக்கான விண்ணப்பப் படிவங்களை வழங்கிவந்தனர்.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில பொது அமைப்புகளின் எதிர்ப்புகளினால் பின்னர் அவ்வாறான பதிவுகள் கைவிடப்பட்டிருந்தன.
இப் பின்னணியில் மீண்டும் பொலிஸ் பதிவுகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றமையினால் கொழும்பில் வாழும் தமிழர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் தேவையற்ற பிரச்சினைகளைத் தடுக்கும் நோக்கில் இவ்வாறான பதிவுகளை பொலிஸார் மேற்கொள்வதானால் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறான அறிவிப்புகள் எதுவுமின்றி ஈழத்தமிழர்கள் நெருக்கமாக வாழும் பிரதேசங்களில் மாத்திரம் பொலிஸ் பதிவுக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றமை தொடர்பாகச் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
கிராம சேவையாளர்கள் ஊடகவிண்ணப்பப் படிவங்களை வழங்காமல்,
ஏன் பொலிஸார் மூலமாக வழங்க வேண்டும் என்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள தொடர் மாடிகளில் இந்த விண்ணப்பப் படிவங்கள் நேற்று வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டதாகவும், வேறு பிரதேசங்களில் நேற்று முன்தினம் விநியோகிக்கப்பட்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
‘குடியிருப்பாளர் விபர அட்டவணை – பொலிஸ் சட்டத்தின் 76 ஆம் பிரிவின் கீழ் செய்யப்படும் கூற்று’ என்று விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.