தமிழரசுக்கட்சியின் தலைமை உட்பட்ட தெரிவுகளை மீள மேற்கொள்ள நீதிமன்றில் இணக்கம்!

தமிழரசுக்கட்சியின் தலைமை உட்பட்ட தெரிவுகளை மீள மேற்கொள்ள நீதிமன்றில் இணக்கம்!

editor 2

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமை, பொதுச் செயலாளருக்கான
தெரிவுகள் கட்சியின் யாப்பை மீறியுள்ளன. எனவே, யாப்பின் பிரகாரம் தலைமை உள்ளிட்ட அனைத்து நிர்வாக பதவிகளையும் மீளத் தெரிவு செய்வதற்கு தயார். இதன்மூலம் மனுதாரர்கள் கோரும் நிவாரணங்களை வழங்கத் தயாராக உள்ளதாக அந்தக் கட்சி திருகோணமலை நீதிமன்றில் உறுதியளித்தது.

இந்த வழக்கில் எம்.ஏ.சுமந்திரனின் நிலைப்பாட்டை அறிவதற்காக ஏப்ரல் 5ஆம் திகதி வரை
வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 21 ,27ஆம் திகதிகளில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிர்வாக தெரிவுகளை இரத்து
செய்யக்கோரி திருகோணமலையை சேர்ந்த கட்சியின் உறுப்பினர் திருகோணமலை
மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் இடைக்கால கட்டாணை
வழங்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று மாவட்ட நீதிபதி மா.கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது, நீதிமன்றில் மாவை சேனாதிராசா, சி.சிறீதரன், ச.குகதா
சன், சீ. யோகேஸ்வரன் சார்பில ஜனாதிபதி சட்டத்தரணிகள் கே. வி.தவராசா, புவிதரன் ஆகியோர்
முன்னிலையாகியிருந்தனர்.

இந்த வழக்கில் வழங்கப்பட்ட கட்டாணையை நீடிக்க வேண்டுமென வழக்காளி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் கோரினார்.

இதற்கு பதிலளித்த பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி கே. வி. தவராசா இது சாதாரண எல்லை, காணி பங்கீட்டு வழக்கல்ல. ஓர் இனத்துடன் தொடர்புடைய – பாரம்பரிய கட்சியுடன் தொடபுடைய வழக்கு. இந்த வழக்கை தொடர்ந்து நீடிக்க- தொடர்ந்து நடத்த நாம் தயாரில்லை. இதனால் இன நலனின் அடிப்படையில் வழக்கை முடித்து, கட்சியை இயங்க செய்வதற்காக சில விட்டுக்கொடுப்புகளை செய்யவும் தயாராக இருக்கிறோம்.

வழக்காளிகள் கோரும் நிவாரணங்களை நாம் வழங்க தயாராக இருக்கிறோம்.

தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டி நடந்ததாலேயே இந்த நிலைமை வந்தது. சிறீதரன் வெற்றி பெற்றிருக்காவிட்டால் இந்த வழக்கே வந்திருக்காது. ஆனால், சிறீதரன் பெரும் பான்மையான வாக்குகளால் வென்றார்.

அவர் அந்த வெற்றியையும் துறந்து கட்சியை மீள இயங்க செய்ய விரும்புகிறார். அதனால் தலைவர் தெரிவையும் மீள நடத்தத் தயாராக இருக்கிறோம் – என்றார்.

இதனிடையே, ப. சத்தியலிங்கம், சே.குலநாயகம் ஆகியோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஆட்சேபனைக்கு திகதி குறிப்பிடும்படி கேட்டார்.

இதை சட்டத்தரணி கே.வி.தவராசா ஆட்சேபித்தார். அவர்கள் இருவரும் இந்த மன்றிலேயே இருப்பதால் அவர்களின் நிலைப்பாட்டை நேரில் கேட்க வேண்டுமென்றார். இதற்கு அவர்கள்
சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஆட்சேபனை தெரிவித்தார்.

எனினும், இது கட்சி சார்ந்த வழக்கு, அனைவரும் கட்சி பிரமுகர்கள், கட்சி தீர்மானமும் இதில் தொடர்புபட்டுள்ளது என கே. வி. தவராசா சுட்டிக்காட்டினார். இதையடுத்து, அவர்களின் நிலைப்பாட்டை கேட்க நீதிமன்றம் சம்மதித்தது.

இருவரையும் அழைத்த நீதிமன்றம், அவர்களின் நிலைப்பாட்டை கேட்டது. அவர்கள் தமக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறினர்.

இந்த வழக்கின் 7 பிரதிவாதிகளில் ஒருவரான எம். ஏ. சுமந்திரன் நேற்று மன்றில் முன்னிலையாகவில்லை. எனவே, அவரின் நிலைப் பாட்டை அறிய ஏப்ரல் 5ஆம் திகதிக்கு
வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதேசமயம், சுமந்திரனும் ஆட்சேபிக்காதபட்சத்தில் இந்த வழக்கு விரைவில் தீர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article