2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது தமக்குக் கிடைத்த 527, 000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 100 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பணத்தை விடுவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் வங்கியொன்றின் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த குறித்த பணத்தில் பெருந்தொகையானவை கறையான்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தமது பிரசார நன்கொடையாக குறித்த பணத்தை பெற்றிருந்தார்.
இது இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 16 கோடியே 45 இலட்சம் ரூபாவென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த பணம் இலங்கையில் உள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடப்பட்டிருந்த நிலையில், பரிவர்த்தனை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் பின்னர் அந்த பணத்தை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
குறித்த பணத்தை தமது மகளின் கணவரின் தாயாருக்கு தற்காலிகமாக வைத்து கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ளதாக சரத் பொன்சேகா முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குறித்த பெண்ணுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், பரிவர்த்தனை கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தாம் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் அந்தப் பணம் சரத் பொன்சேகாவுக்கு சொந்தமானது எனவும் சட்டமா அதிபர் மற்றும் நீதிமன்றத்துக்கு அவர் அறிவித்திருந்தார்
இதன்படி, சரத் பொன்சேகா உரிய பணத்தை கோரி நீதிமன்றத்தில் சத்தியக் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.
பணத்தை விடுவிப்பதா இல்லையா என்பதை நிதியமைச்சு தீர்மானிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதன்படி, உரிய பணத்தை விடுவிக்குமாறு சரத் பொன்சேகா நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிடம் எமது பிரிவு வினவியிருந்தது.
அதற்கு பதிலளித்த அவர், குறித்த பணத்தை விடுவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளதாகவும் எனினும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.