கைதான ஆவா குழுவின் தலைவர் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகின!

கைதான ஆவா குழுவின் தலைவர் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகின!

editor 2

கல்கிசை பகுதியில் வைத்து கைதான யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் பாரிய குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்த ஆவா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவர் தொடர்பில் மேலதிகள் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கல்கிசை – யஷோராபுர பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் வைத்து, வலான மோசடி தடுப்புப் பிரிவினால் 25 வயதுடைய குறித்த நபர் நேற்று கைதுசெய்யப்பட்டதாக  பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த நபருக்கு எதிராக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறு குற்றச்சாட்டுகளுக்காக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால் 2 திறந்த பிடியாணைகளும், மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் 2 பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் உள்ளிட்ட மேலும் பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தெல்லிப்பளை, சுன்னாகம், மானிப்பாய், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி காவல்நிலையங்களில் கொலை, கொள்ளை, கப்பம் பெறல் உட்பட பல குற்றச் சம்பவங்கள் தொடர்பாக சந்தேகநபருக்கு எதிரான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இந்தநிலையில், அவர் கல்கிசை – யஷோராபுர பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் பல மாதங்களாக தங்கியிருந்த நிலையில், திட்டமிட்ட குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த வீட்டில் தங்கியிருந்த நிலையில் டுபாய் நோக்கி இரகசியமாக தப்பிச் செல்வதற்கும் அவர் திட்டமிட்டிருந்ததாகவும் இதுவரையிலான விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வாடகை அடிப்படையில் தமது வீடுகளை வழங்குவதாயின் வீட்டை வாடகைக்கு பெறுபவர்கள் தொடர்பான அடிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

அத்துடன், வாடகைக்கு வீடுகளை பெற்றுள்ளவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகம் நிலவுமாயின் அருகிலுள்ள காவல்நிலையத்துக்கு அறிவிக்குமாறும் வீட்டு உரிமையாளர்களை பொலிஸ் ஊடகப்பிரிவு கோரியுள்ளது.

Share This Article