வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பயணித்த பேரணியில் கலந்துகொண்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் உட்பட ஏழு பேரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் விடுவித்தது.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தைக் கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து கிழக்கு நோக்கி முன்னெடுக்கப்பட்ட பேரணியில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவன், எம்.கே.சிவாஜி லிங்கம், யாழ். மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட எழு பேரே வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
தேர்தல் காலத்தில் போராட்டம் நடத்தியமை, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 7 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அத்துடன், கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகப்போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலருக்கு எதிரான வழக்கு விசாரணையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.
மேற்படி இரண்டு வழக்குகளும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு தொடர்பாக பொலிஸார் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற வேண்டும் எனத்தெரிவித்தபோது பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி கே.வி.தவராசா இரண்டு வழக்குகளையும் கிடப்பில் போட்டு அனைவரையும் விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து இரண்டு வழக்குகளையும் கிடப்பில் போட்ட நீதிமன்றம் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்த வழக்குகளில் பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுடன் சட்டத்தரணி பிருந்தா சந்திரகேஷ் ஆஜராகியிருந்தார்.