பெப்ரவரி முதலாம் திகதி முதல் அனைவருக்கும் வரிக்கோப்பு இலக்கம் கட்டாயம்!

editor 2

எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் அனைவருக்கும் வரிக்கோப்பு இலக்கம் கட்டாயமானது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த நாட்டில்வருமான வரி செலுத்தக்கூடியவர்கள் 10 இலட்சம் பேர் இருந்தும் 5 இலட்சம் பேர் மாத்திரமே வரிசெலுத்தி வருகின்றனர். இதனால், மறைமுக வரியை குறைக்கவும், நேரடி வரியை அதிகரிக்கவும், வரி ஏய்ப்பு செய்யும்  சுமார் 5 இலட்சம் பேரையும் வரிவலைக்குள் கொண்டு வர வேண்டும். வரி செலுத்துபவர் ஒரு நாட்டில் பலம் வாய்ந்த குடிமகன். இது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்த நாட்டு மக்களும் இத்தகைய மனப்பான்மையை கொண்டுவருவது நாட்டின் அபிவிருத்திக்கு உதவும் – என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

2019ஆம் ஆண்டின் இறுதியில் 17 இலட்சத்து 5 ஆயிரத்து 233 ஆக இருந்த வரிக் கோப்புகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 4 இலட்சத்து 37 ஆயிரத்து 547 ஆகக் குறைந்தது.

எமது அரசாங்கத்தின் புதிய கொள்கைகளால், 2023 டிசம்பர் 31இற்குள் வரிக்கோப்புகளின் எண்ணிக்கையை 10 இலட்சத்து 2 ஆயிரத்து 29 ஆக உயர்த்த முடிந்தது. நாம் மேலும் அந்தத் தொகையை அதிகரிக்க வேண்டும்.

அத்துடன், கடந்த வருட இறுதிக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8வீதமாக இருந்த அரச வருமானத்தை 10 வீதமாக அதிகரிக்க முடிந்தது. 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அதை 12 வீதமாக உயர்த்த இலக்கு வைத்துள்ளோம்.

ஓரளவு நிலையான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக மாறுவதற்கு 2025 ஆம் ஆண்டளவில் 15வீதமாக அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்.

மேலும், வற் வரிக்கு சில திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இதுவரை 15 வீதமாக இருந்த வற் வரி 18வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 8 கோடி ரூபாயாக இருந்த வற் வரி எல்லை 6 கோடி ரூபாயாக அமையும். 2001 இல் வற் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகள் வற்வரிக்கு உட்பட்டது. அதில் குறைந்த எண்ணிக்கையிலான பொருட்களுக்கு வரி திருத்தச் சட் டத்தின் ஊடாக விலக்களிக்கப்பட்டன. விலக்கு அளிக்கப்பட்ட 138 பொருட்கள் மற்றும் சேவைகளில், 97 வகையானவை இந்தத் திருத்தத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன.

வற் வரி திருத்தத்தின் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அரச வருமானம் 2.07 வீதத்தால் உயரும். இது 64 ஆயிரத்து 500 கோடி ரூபாய். வரி விகிதங்களின் அதிகரிப்புடன் பணவீக்கம் 2.5வீதமாக அதிகரிக்கும் என மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவு பகுப்பாய்வு செய்துள்ளது. மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதன் மூலம் பணவீக்கத்தை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் மீண்டும் 5 வீதத்துக்கு கொண்டு வரமுடியும் என மத்திய வங்கியும் நிதி அமைச்சும் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

இன்று நேரடி வரிகள் 30 வீதமாகவும் மறைமுக வரிகள் 70 வீதமாகவும் உள்ளன. இந்த வரி விகிதத்தை மாற்றி, நேரடி வரி விகிதத்தை 40 வீதத்துக்குக் கொண்டு வருவதே எமது இலக்கு. உலகில் அபிவிருத்தி அடைந்த ஒரு நாட்டின் நிலை அதுவேயாகும். வரி செலுத்தக்கூடிய பலம் வாய்ந்த 10 மில்லியன் மக்கள் உள்ளனர், ஆனால் தற்போது 5 இலட்சம் பேர் மட்டுமே வரி செலுத்துகின்றனர். எனவே, வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டறிந்து, அவர்களை வரி வலைக்குள்ளே கொண்டு வர வேண்டும். பின்னர் மறைமுக வரிகளை குறைக்க முடியும். பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து வரிக்கோப்பு இலக்கத்தை நடைமுறைப்படுத்தத் தயாராகி வருகிறோம். தற்போது அதனைப் பதிவு செய்வதில் சிக்கல்கள் உள்ளன. மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக உள்ளதால் தான் அந்தப் பிரச்சினைகள் தோன்றியுள்ளன.

எனவே பிரதேச செயலக மட்டத்தில் அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஆலோசித்து வருகிறோம். அதனை ஒன்லைன் முறை மூலம் செயல்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் – என்றார். 

Share This Article