திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இந்த வாரம் நாடாளுமன்றத்திற்கு!

editor 2

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் இந்த வாரம் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது.

வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ள இந்த அமர்வில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உட்பட 8 சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் இந்த விவகாரத்துடன் தொடர்புபட்ட பலர் மற்றும் இராஜதந்திர சமூகத்தினர் முன்வைத்த கரிசனைகளுக்கு ஏற்பதிருத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த சட்டமூலத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்லமுடியும்.

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தில் காணப்படாத பல வித்தியாசமான அம்சங்கள் புதிய சட்டமூலத்தில் இடம்பெற்றுள்ளன.

புதிய சட்டமூலத்தில் பாதுகாப்பு அமைச்சருக்கு தடுத்து வைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்கும்
அதிகாரம் வழங்கப்படவில்லை.

அந்த அதிகாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர் பொலிஸ்மா அதிபரின் பரிந்துரையின் பேரில் இந்த உத்தரவைபிறப்பிப்பார். புதிய சட்டமூலத்தில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு வழங்கப்படுகின்ற வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது.

பயங்கரவாதம் என்பதற்கான வரையறையையும் புதிய சட்ட மூலம் கொண்டிருக்கும்.

பயங்கரவாதம் என்பதற்கான சர்வதேச அளவிலான வரைவிலக்கணம்
இல்லாததால் நாங்கள் எங்கள் வரை விலக்கணத்தை முன்வைக்கின்றோம்.

அத்துடன், சந்தேகநபரை தடுத்துவைக்கக்கூடிய நாட்கள் தற்போது 90 ஆக காணப்படுகின்றன.

இதனை 30 நாட்களாக புதிய சட்ட மூலம் குறைக்கின்றது என்றும் கூறினார்.

Share This Article