விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை ஒரு சேரப் போற்றும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக நடைபெற்றுவருகின்றன.
தாயகத்தில்
மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர்களின் பெற்றோராலும் உறவுகளாலும் சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
ஒவ்வொரு மாவீரர் துயிலும் இல்லங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்ததாக பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றன.
அனைத்துத் துயிலும் இல்லங்களிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்குமாறு பொலிஸார் பல நீதிமன்றங்களிலும் வழக்குத் தாக்கல் செய்திருந்தபோதிலும் வடக்கு மாகாணத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான அனுமதி மறுக்கப்படவில்லை.
அதேவேளை,
கிழக்கு மாகாணத்தில் பல துயிலும் இல்லங்களில் நினைவேந்தல்களை மேற்கொள்ள முழுவதுமாக தடை, நிபந்தனைகளுடன் அனுமதி என மாறுபட்ட அளவில் தீர்ப்புக்கள் வெளியாகியிருந்தன.
அதேவேளை,
கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் சில துயிலும் இல்லங்களில் மாவீரர் நினைவேந்தலுக்காக கட்டப்பட்டிருந்த சிவப்பு, மஞ்சள் கொடிகள் பொலிஸாரால் அறுக்கப்பட்டிருக்கின்றன.
அதேவேளை, சில துயிலும் இல்லங்களில் நினைவுத்தூபிகளும் உடைக்கப்பட்டுள்ளன.
இருந்தபோதிலும்,
முல்லைத்தீவின் இரணைப்பாலை, முள்ளியவளை, தேராவில், ஆலங்குளம், வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லங்கள் கிளிநொச்சியின் கனகபுரம், முழங்காவில் துயிலும் இல்லங்களிலும் யாழ்ப்பாணத்தின் கோப்பாய், சாட்டி, கொடிகாமம் துயிலும் இல்லங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு தமது உறவுகளுக்கு சுடரேற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல,
நல்லூர் உட்பட்ட பல பகுதிகளில் மாவீரர் நினைவிடங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு நினைவு அஞ்சலிகள் நடைபெற்றபோது நிகழ்வில் ஆயிரக்கணக்கான உறவுகள் பங்குகொணடிருந்தனர்.