பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வதற்காக சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பிச் சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் யுகதீபன் என்ற நாற்பது வயது மதிக்கதக்க ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக அந்நாட்டு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி விமானம் மூலம் ரஸ்யா சென்று அங்கிருந்து பெலாரஸ், போலந்து, ஜேர்மன் ஊடாக பிரான்ஸ் செல்வதற்காக பெலாரஸிலிருந்து போலந்துக்கு சுமார் 700 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து கடப்பதற்காக ஏழு பேர் கொண்ட குழுவுடன் சென்ற போது உடல் நிலை பாதிக்கப்பட்டு பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனையவர்கள் இவரை விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 7 ஆம் திகதி சனிக்கிழமை பெலராஸ் எல்லையில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வட்டக்கச்சியில் உள்ள மனைவியை தொடர்பு கொண்டு தன்னால் நடக்க முடியாதுள்ளது என்றும் தன்னை யாரேனும் காப்பாற்றினால் அன்றி உயிர் தப்ப வேறு வழியில்லை என்றும் தெரிவித்தாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அதுவே அவர் இறுதியாக தொடர்பு கொண்டு பேசியது என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.