தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடந்த சனிக்கிழமை மாலை 02 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று உத்தரவிட்டார்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்த 15 இந்திய மீனவர்கள் சனிக்கிழமை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 02 ட்ரோலர் படகுகளில் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையிலேயே கைதாயினர்.
இந்த 15 இந்திய மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மலேரியா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து கடற்படையின் ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், மீனவர்கள் அனைவரும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து கைதான மீனவர்கள் அனைவரும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த 15 பேரும் இன்று மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான், மீனவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.