இந்தியா – கனடா இராஜதந்திர நெருக்கடிக்கு காரணமாக உள்ள காலிஸ்தான் அமைப்பின் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இந்தியாவும் அமெரிக்காவும் கலந்துரையாடியுள்ளன.
கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளின்கனிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் ‘இந்திய அரசாங்கத்தின் முகவர்களுக்கு’ தொடர்பு உள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டு, இந்தியாவின் கொள்கையுடன் ஒத்துப் போகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் இவ்வாறான குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
‘பயங்கரவாதிகள் மற்றும் வன்முறையை வெளிப்படையாக ஆதரிக்கும் நபர்களை கனடா அனுமதிக்கும் அணுகுமுறையைக் கொண்டுள்ளது’ என்று வொஷிங்டனில் உள்ள ஹட்சன் நிறுவகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கனேடிய பிரதமரின் குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்கா கவலையடைந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இந்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாகவும் விசாரணையில் கனடாவுடன் இணைந்து பணியாற்றுமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொறுப்பானவர்கள் உரிய முறையில் பொறுப்புக்கூறப்பட வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளின்கன் வலியுறுத்தியுள்ளார்.